வெறுமனே குழந்தைகள் – 01

மனிதர்களின் உதவும் குணம் என்பது இயல்பான ஒன்று. பரிணாமத்தில் வந்தது. வேட்டைச் சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருக்க தேவை இருந்தது. ஆபத்துகளில் ஒருவரை ஒருவர் காத்து வாழ்ந்தால் மட்டுமே பிழைத்திருத்தல் சாத்தியப்படும் நிலை. குழுக்களுக்கு இடையிலான ஒப்புநோக்கிலும், உதவிக்கொள்கிற குணமுடைய குழுவே நிலைத்திருக்கும் என்பது டார்வினிய பார்வை. இன்றைக்கு சுற்றுப்புற காரணிகள் மட்டுமே அப்படியான நம் இயல்புக்கு தடையான ஒன்றாக இருக்க இயலும்.

ஸ்டேன்லி மில்கிராமின் ‘கீழ்படிதல்’ ஆராய்ச்சி பிரபலமானது. கீழ்படிதலின் உச்சியில் பிறருக்கு எந்த அளவு தீங்கிழைக்க நாம் செல்வோம் என்கிற கேள்விக்கு பதில் தந்த ஆராய்ச்சி. முன்னர் அறிந்திருக்காத ஒரு நபருக்கு நாம், உயிரைப்பறிக்கிற அளவு மின்சாரத் தாக்குதலை தரவும் தயங்க மாட்டோம் என்பது அந்த ஆராய்சியின் முடிவு. அதே மில்கிராம், மனிதர்களின் உதவும் குணம் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார்.

முகவரி தெளிவாக எழுதி, அஞ்சல் தலைகளும் ஒட்டிய கடிதங்களை நகரத்தின் பல இடங்களில் வைக்கிறார்கள். சரியான இடங்களுக்கு அந்த கடிதங்கள் வந்து சேர்கின்றன. அறியாத ஒருவருக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் இந்த சிறிய செயலானது, மனிதர்களின் இயல்பை பற்றிய புரிதலை நமக்கு தருகிறது. ஆனால், இந்த உதவி வரையறைக்கு உட்பட்டது. வந்து சேர்வதில் விடுபட்ட கடிதங்கள் பெரும்பாலும் இதைப்போல் எழுதப்பட்டவை ‘நாஜிக் கட்சி தோழர்களுக்கு’.

தானம் அளித்தல் என்பது ஆராய்ச்சிகளின் முடிவுகள் எப்போதும் காட்டுவது போல சுயநலம் மறைந்திருக்கிற செயலாகவே இருக்கிறது. பெரிய அளவிலான தொகையை தானம் அளிப்பது என்பது அந்தஸ்தையும், தன்னுடைய சொத்தைப்பற்றிய நிறுவுதலாகவும் அமைகிறது. கல்வி நிறுவனங்களுக்கு கொடை அளிக்கிற பெற்றோர், தம் குழந்தைகளின் கல்வியை பற்றி கவலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இல்லையேல், பிராத்தனைகள் புண்ணியம் சேர்த்தல் என்பதாக இருக்கிறதை நாமே அறிவோம். அவற்றால் பலனடையும் எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் மனிதனின் உள்ளிருக்கிற நல்ல குணம் என்பது எப்படியானது? சுயநலமே இல்லாமல் மற்றவர்களுக்காக தன்னை இழக்கிற மனிதர்களை எப்படி புரிந்துகொள்ளளாம்?

முன்னால் சொன்னதைப்போல மனிதர்களின் உதவும் குணமும், தியாக உணர்வும்கூட பரிணாமத்தில் வந்தது. அதைப்போலவே கொஞ்ச கொஞ்சமாக நம் சமூகத்தை சிந்தனை என்பதன் மூலமாக சரிப்படுத்தி வருகிறோம். உடன் கட்டை ஏறுவதை எப்படி ஒழித்தோமோ, அடிமை முறையை தவறென்று அப்படியே புரிந்துகொண்டோம். தீண்டாமை என்பது இன்னும் வேறு உருவங்களின் தொடர்வதை எப்படி விமர்சிக்கிறோமோ, அப்படியே மரண தண்டனையை எதிர்க்கிறோம். இதெல்லாம் நாம் வளர வளர கற்றுக்கொள்வது தானே? ஒரு குழந்தை பிறக்கும்போது எப்படியான மதிப்பீடுகளோடு பிறக்கிறது? அடிப்படையாக குழந்தைகள், ஒரு வெள்ளைத்தாள் போன்ற மனதுடன் பிறக்கிறது என்பதே புரிதலாக இருந்தது.

அதை ஆராய எடுத்துக்கொண்ட யாலே பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களின் முயற்சி, பெரிய சிக்கல்களில் சிக்காமல் நாம் மனித மனதின் இயல்பை புரிந்துகொள்ள உதவக்கூடிய ஒன்று. அதை இன்னும் எளிமைப்படுத்தி, தன் துறைசார் அனுபவங்களையும் தொகுத்து பவுல் ப்ளூம் ஆக்கித்தந்த புத்தகம் தான் இந்த ‘Just Babies: Origin of Good and Evil’ என்ற புத்தகம்.

எவையெல்லாம் அறம் என்னும் கேள்வியில் தொடங்குகிறது புத்தகம். நமக்கு இயல்பாக இருக்கும் ஒரு செயல், இன்னொரு கலாச்சாரத்தில் ஒழுங்கீனமாக கருதப்படுகிறது. இன்னொரு கலாச்சாரத்தவரின் பழக்கங்கள் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். நம்முடைய நாட்டிலேயே ஐந்நூறு கிலோமீட்டருக்கு ஒரு மொழியும், சற்றே வேறுபட்ட கலாச்சாரமும் இருக்கிறது. இப்படியான நிலையில் எவையெல்லாம் நல்லது என்றும் எவற்றை கெட்டது என்றும் வகைப்படுத்தலாம்? அடிப்படையாக எவை குழந்தைகளிடம் தென்படுகின்றன? அடிப்படை அறம் என்பது உலகப்பொதுவானது. அவை கலாச்சார பாதிப்பு இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. கலாச்சாரம் சார்ந்த பார்வைகளும், பழக்க வழக்கங்களும் நாம் கற்றுக்கொள்வது. மாறாக, அடிப்படை அறம் என்பது பிறப்பிலேயே வருகிற ஒன்று. அதை குழந்தைகளை ஆராய்ந்து நிறுவியிருக்கிறார்கள்.

இரண்டு வயது குழந்தைக்கு ஒரு பொம்மை விளையாட்டு காட்டப்படுகிறது. மூன்று பொம்மைகள். நடுவில் இருக்கிற பொம்மை ஒரு பந்தை இடது பக்கம் இருக்கிற பொம்மையிடம் உருட்டிவிட, அது திருப்பி உருட்டி விடுகிறது. பின்னர் அதையே வலது பக்கம் இருக்கிற பொம்மையிடம் உருட்டினால், அது அதை தூக்கிக்கொண்டு ஓடுகிறது. அதன் பிறகு மூன்று பொம்மைகள் முன்னாலும் பரிசுகள் வைக்கப்படுகிறது. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளும் வாய்பை குழந்தைக்கு கொடுக்கிறார்கள். குழந்தையானது எதிர்பார்த்தபடியே குறும்புக்கார பொம்மையின் பரிசை பிடுங்கிக்கொள்கிறது. சில குழந்தைகள் ஏதிர்பார்க்காதபடி, பொம்மையை நெருங்கி குட்டும் வைக்கிறது. இப்படியே இன்னொரு பரிசோதனை. கைநிறைய பொருட்களோடு அறைவிட்டு வெளியேற முயல்பவரால் கதவைத்திறக்க இயல்வதில்லை. எந்தவொரு அழைப்பும், எவருடைய கவனத்துக்கும் உட்படாத நிலையிலேயே கதைவை திறந்துவிடும் இயல்பு குழந்தைகளிடம் இருந்தது. இது எங்கிருந்து வருவது? எப்படி என்பதை அவர் விளக்குகிறார்.

Empathy’க்கும், compassion’க்குமான வேறுபாட்டை பற்றி பேசுகிறார். ஒருவரின் துயரங்களை பார்த்து நாம் பரிதாபப்படுவது இயல்பு. ஒரு விபத்தையே கண்ணெதிரில் பார்க்க நேரிட்டால், விபத்தை நாம் சந்தித்தது போல உணருகிறோம். ஒரு திரைப்படம் பார்க்கிறோம். நாயகனின் சாகசங்களை நம்முடைய சாகசங்களாக நாம் உணரும் தருணங்கள் வரும். இது எப்படி? Mirror neurons என்கிறவை நம்முடைய மூளையில் செயல்படும் விதம் எப்படி, என்னெவெல்லாம் செய்கிறது என்கிற அடிப்படை விளக்கத்தை தருகிறார். அவையே இப்படியான பிரதிபலிப்புக்கு, நம்முடைய மன உணர்வுக்கு காரணமாயிருக்கிறது என்பதை விளக்குகிறார்.

சரி, இப்படி நாம் உணருவதால் உடனே சென்று விபத்தை சந்தித்தவருக்கு உதவுவோமா? அல்லது, நிறைய கடனில் இருப்பவருக்கு நம்மிடம் இருக்கும் காரணத்தாலேயே எடுத்துத் தருவோமா? மற்றவர்களின் துன்பத்தை நம்முடையதாக உணரும் நமக்கு, நிஜத்தில் உதவ எது தடையாய் இருக்கிறது? அங்கேதான் compassion என்கிற விஷயம் வந்து சேர்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s