குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும் நாவலை முழுவதும் படித்த பிறகு ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் படித்து முடித்த போது எப்படி அதைப்பற்றி எளிமையாக எழுத முடியும் என்று தோன்றியது. கொஞ்ச நேரம் விரக்தியோடு உட்கார்ந்திருந்தேன். ஒரு நீண்ட காத்திருப்பில், தொலை தூரத்தில் தெரிகிற வாழ்கைக்கான காத்திருப்பில் ரஸ்கோல்நிகோவையும், சோனியாவையும் விட்டுவிட்டு நாவல் முடிகிறது.

சோனியா ஒரு தேவதை. தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து தவறி விழுந்து முடிவற்று சரிந்து கொண்டேயிருந்த ரஸ்கோல்நிகோவை மீட்டெடுக்க வந்த தேவதை. நரகத்தில் பிறந்துவிடும் ஒரு தேவதையின் கதை, இப்படிதான் இருக்க முடியும். ஏன் இப்படியான மரணங்களை, இவ்வளவு ரத்தத்தை மேலும் நிறைய கண்ணீரை தாண்டி வரவேண்டும் ஒரு நாவலில்? ஏனெனில் நிஜம் அப்படித்தான் இருக்கிறது.

நிஜத்தை பார்க்கிற ஒருவனாக எழுத்தாளன் இருக்க நேர்வதால் அதை எழுதினால் அன்றி அவனால் உறங்க முடிவதில்லை. சராசரி மனிதர்களை பற்றி, தடைகளற்ற ஆற்றில் செல்லக்கூடிய நீரோட்டம் போன்ற வாழ்கையை, எளிமையான கொண்டாட்டங்கள் மட்டுமே கொண்ட கதைகளை எழுதலாமே? எழுத்தை பொழுது போக்காக மட்டுமே செய்யலாமே?

எந்தவொரு நல்ல படைப்பும் எப்படியான மனிதர்களை பற்றி பேசுகிறது? எளிய மனிதர்களை. எளிய மனிதர்களுக்கு நடுவில் இருந்து எழுந்து வருபவர்களை. தங்களுடைய பலவீனங்களால் வீழ்பவர்களை, அவற்றின் காரணமாக தவறு செய்து விடுபவர்களை. தங்களின் தவறுகளை உணரக்கூடியவர்களை. தவறுகளை உணர்த்தக் கூடியவர்களை.

எந்த பலவீனமும் இல்லாத மனிதன் கதைகளுக்குள் வந்து வசிக்கிற தகுதியை இழக்கிறான். ஒரு எழுத்தாளனுக்கு அவனோடு எந்த உறவும் இருக்க முடியாது. இங்கே பலவீனம் இல்லாதவர்கள் இல்லை. தேவர்களும். எந்த இலக்கியமும் அப்படியான மனிதர்களை கொண்டவை மட்டுமே. அப்படியான மனிதர்களின் வாழ்கையை பேசுபவை மட்டுமே. குற்றமும் தண்டனையும் அப்படியான ரஸ்கோல்நிகோவின் வாழ்கை. அப்படியான சோனியாவின், செம்யோனின், கேதரீனாவின், லூசினின், ஸ்விட்ரிகைலோவின் வாழ்கையை பற்றிய கதை.

எனக்கு ரஸ்கோல்நிகோவை தொடர்ந்த போது மிகவும் எரிச்சலாகவே இருந்தது. தனக்குள்ளாக விழுந்து சிக்கிக் கொண்டு சிந்திக்கிற ஒரு பைத்தியக்காரனின் பின்னால் என்னை அழைத்துப் போவதை நான் வெறுத்தேன். அவன் என்ன தான் செய்து கொண்டிருக்கிறான்? ஆனால், அவனில் தெரிந்த தீர்க்கமான முடிவெடுக்கும் திறன், முதலில் தங்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தை மறுக்கிற உறுதியில் தெரியவரும். அவனின் தாயும், தங்கையும் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு வந்த பின்னர் அவனின் தவிப்புகள் அதிகமாகிவிட்டிருக்கும். அவன் செய்துவிட்ட இரட்டை கொலையில் இருந்து அவன் பெற்ற மனப்போராட்டத்தோடு இதுவும் சேர்ந்துவிடும்.

சிறுவயதில் டால்ஸ்டாயை நிறைய வாசித்திருக்கிறேன். நூலகத்தில் கிடைத்த அவரது மொழிபெயர்ப்புகளை நானும் என் அம்மாவும் போட்டியிட்டு வாசித்திருக்கிறோம். ஆனால், போரும் அமைதியும் அடுக்கப்பட்டிருந்த விதத்தை பார்த்தவுடனே ஒரு பயம் வரும். அதை நூலகத்தில் இருந்து எடுக்க முடியாது. அங்கிருந்து மட்டுமே வாசிக்க அனுமதி உண்டு. ஏனோ என் கைகளால் அதை தொடுவதற்கு பயம். ஆனால், மேலே வாசிப்பதற்கு ஒவ்வொருமுறை போய் உட்காரும்போதும் அதை பார்க்காமல் திரும்பியதில்லை. கடைசியாக எடுத்தபோது ஒன்றிரண்டு அத்யாயங்களுக்கு பிறகு என்னால் தொடர முடியவில்லை. ஆனால், தஸ்தாயெவ்கியின் எந்த புத்தகத்தையும் நான் வாசித்திருக்கவில்லை. இந்த நாவலில் இருந்து அவரை வாசிக்க தொடங்கி இருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணன் சேலத்தில் பேசக்கேட்ட ஒரு நீண்ட பேச்சு தான் எனக்கு குற்றமும் தண்டனையையும், தஸ்தாயெவ்ஸ்கி என்கிற படைப்பாளியையும் அறிமுகப்படுத்தியது. எஸ்.ரா என்னை அந்த படைப்பாளியின் வாழ்கையை பீட்டர்ஸ்பெர்க் நகரத்திலும், சைபீரியாவின் உறைபனியிலும், துப்பாக்கி முனைக்கு அருகில் அவர் மண்டியிட்டிருந்த தினத்துக்கும் நேரே சென்று பார்க்க வைத்திருந்தார். சரியாக ஆறே மாதத்தில் நான் ரகசியமாக பெயரை வைத்துக்கொள்ள விரும்புகிற, என் பிரியத்துக்குரிய எழுத்தாளரின் கைகளால் எனக்கு அந்த புத்தகம் கிடைத்தது.

அவர்கள் இருவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s