பால்யகால சகி

இரண்டாவது வாசிப்புக்கு பால்யகால சகியை எடுத்து வைத்திருந்தேன். மிகச்சிறிய நாவலான அதை, படிக்க அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே தேவைப்படும். வாசிக்க சிரமம் இருக்கும் என்றால் பெரும்பாலான உரையாடல்கள் மலையாளத்தில் இருந்து அப்படியே எளிமைப்படுத்தி தந்திருப்பதால்.

ஆனால், அந்த கதையை அப்படி வாசிக்காவிட்டால் எந்த ஒன்றுதலும் கிடைக்காது. முந்தைய வாசிப்பின் போது எனக்கு கேரளாவோடு எந்த பரிச்சயமும் கிடையாது. இப்போது கேரளாவில் வசிக்கிற ஒருவனான பிறகு, வாசிப்பு எத்தனையோ வேறுபாடுகளை கொண்டிருந்தது.

கதை மஜீதை பின்தொடர்ந்து சொல்லப்படுகிறது.  சிறுவயதில் இருந்தே நண்பர்களான மஜீதும், சுகறாவும் வளரும்போது காதலும் சேர்ந்து வளருகிறது. அவர்களின் வாழ்கை முறையை குறைந்த அளவிலான தகவல்களின் மூலம் சொல்லிச் செல்கிறார் பஷீர். அதனால் அடிப்படையான இரு நிகழ்வுகளை தவிர்த்து, இந்த கதை வேறு எந்த இடத்திலும் தன்னை நிகழ்த்திக் கொள்ள முடியும். பாத்திரங்கள் தங்களின் பங்களிப்பாக வெறுமனே வந்து போவதை தவிர்த்து எந்த திருப்பத்தையும் உண்டாக்குவதில்லை. ஆனால் அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிற மொழியும், அவர்களின் மொழியும் அதை நேர்செய்துவிடும். நாவலில் அப்படி சுகறாவை, மஜீதை விடவும் முழுமையடைந்து நிற்கக்கூடிய கதாபாத்திரம் மஜீதின் அப்பா.

மஜீதூம், கதை சொல்லியும் ஒரே விதத்தில் சிந்திக்கக்கூடிய மனிதர்களாக இருக்கிறார்கள். சொல்லப்போனால், வீட்டை விட்டு மஜீத் ஓடிய பிறகு முற்றிலுமே வாழ்கையில் பிடிப்பற்றவனாகவே இருக்கிறான். எதையும் கற்றுக் கொள்வதில்லை. கிடைத்த வேலையை செய்து பொழுதை போக்குகிறான். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அத்தனை வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்தவனுக்கு, பிழைப்புக்கு என்ன செய்வது என்கிற கேள்விக்கு விடையில்லை. சுகறாவிடம் பின்னாளில் கடிதம் எழுதாததை பற்றி பேசும்போதுகூட, அவனிடம் காரணம் எதுவுமே இருப்பதில்லை. அப்படியும் அவள் அவனுக்காக காத்திருந்திருக்க வேண்டும் என்கிறான் மஜீத்.

balyagalasaki-basheer

சுகறா மஜீதால் நினைத்துப் பார்க்கப்படுவது அவள் இறந்த பிறகு மட்டுமே என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போதுதான், அவள் ஒரு நாள் சொல்ல எத்தனித்தது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி மஜீதுக்கு உண்டாகிறது. இதை காதல் கதை என்று சொல்வதில் இருக்கிற ஒரே தடை, இதுதான். நாவலின் கடைசி பக்கத்திலும் மஜீதால் அவளை தனக்குள் சொல்வதற்கு ஒன்றை வைத்திருக்கக்கூடிய மனிதியாக காண்பதற்கு இயலவில்லை. வெறுமனே யோசிக்கிறான், என்ன அவள் சொல்ல நினைத்திருப்பாள் என்று. அவ்வளவுதான்.

முப்பது வருட கதையை, இடையிடையே சிறிய காட்சிகளாக மட்டுமே சொல்லிவிட்டு நகர்கிறது நாவல். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படித்தான் நடந்தது என்கிற கதை சொல்லும் பாவனை இருக்கிற படைப்பு. வாசிக்கையில் கதை ‘நிகழ்வதில்லை’, பழைய நினைவு ஒன்றை மீட்டு பகற்கனவில் ‘நிகழ்த்திப்’ பார்த்தால் இப்படித்தான் இருக்கக்கூடும். கனவு காண்பவனுக்கு முடிவு தெரிந்தே இருப்பதால் குறைந்தபட்ச ஒன்றுதலே சாத்தியப்படும். அதையே நமக்கும் தரவியலும்.

அதன் வெளிப்பாடாகவே சில காட்சிகள் தொடக்கத்திலேயே விவரிக்க இருக்கிற விஷயத்தை சொல்லிவிடும். உதாரணம் சுகறா ஏன் படிப்பை தொடர முடியாமல் போகிறது என்பதை, அவளின் தந்தையின் மரணத்தால் என்று முதலிலேயே சொல்லிவிட்டு பின்னர் விவரிக்கிறது ஒரு அத்யாயம்.

இந்த நாவலின் முக்கியமான அம்சம் மொழிக்கும் முன்னால் வடிவம். கச்சிதமான என்பதை இந்த நாவலை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால், மேலே சொன்ன காரணங்கள் எல்லாம் சேர்ந்து கதையை தாண்டி வடிவத்தை முன்னால் துருத்திக் கொண்டு தெரிய வைக்கும்.

பால்யகால சகி, முக்கியத்துவம் பெறுவது தன்னிடம் சொல்வதற்கு இருப்பதை இறுதிவரை சொல்லிவிட முடியாமல் போகிற சுகறாக்களில் ஒருத்தியின் கதையாக இருப்பதால். எனவே, உண்மையில் இதை காதல் கதையாக கொள்வது கடினம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s