போராட்டமும் தமிழ்ச்சமூகமும்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் முதல் தினம் தொடங்கி பங்கெடுத்தேன் என்ற அடிப்படையில் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. எப்போதும் எனக்கு வாட்சாப்பில் செய்திகள் வருவது அரிது. போராட்ட காலத்தில் வந்த புகைப்படங்கள் மட்டும் நூறைத் தொடுகிறது. பெரும்பாலான தொடர்பிலே இல்லாத நண்பர்களும் தாங்கள் மறிக்கப்பட்ட ரயிலின் மேலேறி எடுத்த புகைப்படத்தையோ, கூட்டம் தெரியும்படி எடுத்துக்கொண்ட செல்ஃபியையோ பகிர்ந்திருந்தார்கள்.

புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே சென்று வந்தவர்கள் அதிகம். நான் அதிகாலையில் சென்றமர்ந்து, மதியம் திரும்புபவனாக இருந்தேன். மெளனமாக அமர்வதே என்னுடைய பாணியாக இருந்தது. அடுக்கு மொழியில் அமைக்கப்பட்ட கோஷங்களில் இருந்த நாகரீகமின்மை காரணம். தொடக்கத்தில் அப்படியான ஆபாசத் தாக்குதல் அறவே இல்லை. ஆனால், இரண்டாம் மூன்றாம் நாட்களில் அவை அதிகரித்தபடியே சென்றன. இதற்கான காரணம் எளிமையானது.

20170121_182959

போராட்டத்தை நாகரீகமாக எடுத்துச் சென்றதும், தொடக்கி வைத்ததை அணையாமல் பொத்திக் காத்ததும் மாணவர்கள். ஆனால், சேலத்தை பொருத்தவரை மாணவர்களைவிட அதிகமாக இருந்தது பெரிய நிறுவனங்களின் ஆகக் கடைநிலையில் பணிபுரிவோர் மற்றும் முன்னாள் மாணவர்கள். சேலத்தில் மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் முக்கியமானவை. அவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் என்று அடையாளம் சுட்ட முடியுமே அன்றி, நிஜத்தில் அப்படியான இயல்புகளை உதறியவை. மனிதர்கள் மட்டுமே செய்யக்கூடிய இயந்திரத்தனமான பணிகளுக்கு மட்டுமே அவை இங்கே ஆட்கள் எடுக்கும். ஆறாயிரம் என்று பொதுவாக அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை சொல்லிவிடலாம். அப்படியான நிறுவனங்களில் பணிபுரிவோர். மூன்றாவதாக, முன்னாள் மாணவர்கள். வேலையில் இருப்பார்கள், ஆனால் தன் படிப்புக்கு தொடர்பில்லாத அல்லது தற்காலிகமான வேலையொன்றில் இருப்பவர்கள். எனவே அவர்களை முன்னாள் மாணவர்கள் என்றே வைத்துக் கொள்ளளாம்.

இவர்கள் எப்படியெல்லாம் பங்கேற்றார்கள் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லிவிடலாம். மாணவர்கள் விடுப்பு எடுத்தும், விடுப்பு கொடுக்கப்பட்டும் பங்கேற்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு போராட்டத்தை பற்றிய தெளிவு இருந்தது. போராட்ட வடிவத்தை இவர்களே தங்களுடைய சிந்தனைகளின் ஒத்திசைவால் (Shared Consciousness) வடிவமைத்திருந்தார்கள். பெரிய நிறுவனங்களின் பணியாளர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். பணி நேரம் தவிர்த்து இவர்கள் களத்திலேயே அதிகம் இருந்தார்கள். முதல் வகையினர் பெரும்பாலான மாணவர்களை போன்றவர்கள். இரண்டாவது, சமீபத்தில் வெளியான ஜல்லிக்கட்டு பாடல்களுக்கு பிறகு இதைப்பற்றிய அபிப்ராயம் உண்டாக்கிக் கொண்டவர்கள். இவர்களை தவிர்த்த மூன்றாம் வகையினர் இவர்களோடு ஒத்திசைந்து செல்ல முயன்றார்கள். முக்கியமானவர்கள், அவ்வப்போது வந்து பங்கெடுத்து சென்றவர்கள் பொதுமக்கள். நீரும், உணவும் கொண்டு வந்து அளித்தவர்கள் இப்படியான பொதுமக்களே என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று. அவர்களில் கடைகள் நடத்துபவர்கள் அதிகம். கடையை விட்டு வந்து பங்கேற்க்க முடியாததை, இப்படியான பங்களிப்பாக செய்தார்கள்.

சரியாக ரயில் மறியலுக்கு பின்னர், போராட்டத்தில் கொஞ்சம் மாற்றம் கவனிக்க முடிந்தது. சேலத்தில் அதை இளைஞர்களே சேர்ந்து செய்தார்கள். அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் போலீசாரிடத்தில் இருந்து இருக்கவில்லை. அங்கிருந்த கூட்டத்துக்கு அப்படியான எதிர்ப்பின்மையே ஆச்சர்யம் கொடுத்தது. அந்த ரயில் மறியலின் சமயத்தில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முன்னாலிருந்து எழாமல் உட்கார்ந்திருந்தவர்களே, உண்மையில் போராட்டத்தை சரியான வழியில் கொண்டு சென்று கொண்டிருந்தவர்கள். ஒரு ரயிலை நிறுத்தி, மேலே ஏறி ஆட்டம் போடமுடியும் என்பதே அந்த இளைஞர்களுக்கு ஒரு போதையை கொடுத்தது. கும்பலில் கலந்துவிடுவதால் உண்டாகிற அடையாளமின்மை தருகிற போதை. அப்படியான மீறல்களை செய்வதற்காக மட்டுமே ஒரு கும்பல் சேரத் தொடங்கியது. மோசமான கோஷங்கள் நிறைந்ததும் அதன் பிறகுதான்.

20170121_090816

சினிமாத்தனமான கோரிக்கைகள் இவர்களிடம் இருந்தன. விரும்பியபடி எல்லாம் கோஷமிட்டு ஏச முடிந்ததால், அவர்களின் ஈகோவுக்கு மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்து கொண்டார்கள். அதை பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்களின் சோஷியல் மீடியா பங்களிப்பு என்பது மிகவும் அபாயகரமான வகையில் இருந்தது. உதாரணத்துக்கு, ரயில்வே மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவன் உயிரிழந்தார் என்று ஒரு செய்தி பரவியது. அதற்காக இரண்டு நிமிடம் எல்லோரும் எழுந்து மெளன அஞ்சலியும் செலுத்தினோம். ஆனால், அந்த செய்தி பொய்யானது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையின் முன்னால்தான் இத்தனைக்கும் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அப்படி சேரத்தொடங்கிய ஆட்களை, அவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி வைப்பதே மையத்தில் இருந்தவர்களுக்கு பெரிய சுமையாக மாறியிருந்தது. தினமும் காலையில் தொடங்கி மாலை வரைக்கும் இப்படியானவர்களை சமாளிப்பதாகவே அவர்களின் பொழுது கழிந்தது. ஆனால், மாலைக்கு பிறகு நிலமை முற்றிலும் வேறு. அதாவது வேலை நேரத்துக்கு பிறகு. அதிகபட்சமாக மக்கள் கூடத் தொடங்கியது அந்த நேரத்தில் தான். அப்போது மையம் என்பதே இல்லாமல் ஆகும். கூட்டத்தின் இயல்புக்கு தகுந்தபடி பிரிவுகளாக குழுமுவார்கள். உச்சமாக எல்லாம் ஏற்படுத்திக் கொள்வது ஒரு கொண்டாட்டமான மனநிலை. அதற்காகவே மேலும் மேலும் வந்து கூடுகிற கூட்டம். இப்படித்தான் இங்கு உண்மையான போராட்டத்துக்கு ஒரு வெளிவட்டம் உண்டானது. அந்த வெளிவட்டம் உணர்ச்சிகரமான ஆட்களை நிறைய கொண்டிருந்தது. கொஞ்சம் பிசகினால் வன்முறை உண்டாகக்கூடும் என்கிற நிலைக்கு நெருக்கமாக நின்றிருந்தது. எத்தனையோ சிரமங்களை தாண்டி, மையமாக செயல்பட்டவர்களின் முயற்சியால் மட்டுமே இதை சரியாக எடுத்துச் செல்ல முடிந்தது. கடைசி தினம் வரைக்கும்.

ஒருவேளை அரசின் கடைசியான காய் நகர்த்தல் இல்லாமல் இருந்திருந்தால், இந்த போராட்டம் இந்தியாவிற்கேயான தற்கால முன்மாதிரி ஒன்றாக இருந்திருக்கும். ஆனால், அரசியல் சார்ந்த முடிவுகள் மக்களை சார்ந்து எடுக்கப்படுவதில்லை. இப்படி நாளைக்கு அரசுக்கு (ஒருவேளை தாங்கள் அரசமைக்க நேர்ந்தாலுமே) எதிராக எவரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதான பயம். எந்த ஒரு கொண்டாட்ட மனநிலை (போராட்டம் கேள்வி கேட்கப்படாததால்) உண்டாகி அதை வளர்த்ததோ, அதை இல்லாமல் ஆக்கிவிடுவதான முனைப்பு. மீண்டும் இப்படி முயன்றால், இதுவே நடக்கும் என்கிறதை காட்டுவதற்கான முயற்சி. நீங்கள் அடிவாங்குவீர்கள், அல்லது உங்களுக்கு உதவுபவர்கள் அடிவாங்குவார்கள் என்கிற அடக்குமுறை. இதையெல்லாம் தாண்டி, இப்போதும் நாம் நம்மையே தான் கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழ்ச்சமூகம் இப்படித்தான் இருக்கிறதா?

Advertisements

One thought on “போராட்டமும் தமிழ்ச்சமூகமும்

  1. kaalidossan says:

    இப்பவும் போராட்டம் முக்கியமான பாடமாகத் தான் அமைந்திருக்கிறது .. நாகப்பிரகாஷ். தூய்மையான வடிவத்தோடு போராட்டம் தொடங்கியிருந்தால், அது இத்தனை பெரிய வீச்சைப் பெற்றிருக்காது. 30% அதில் வேடிக்கைப் பார்க்கும் மனநிலை என்றாலும், இது முக்கியமான வரலாறு. நிறைய கோணங்களில் பேச வேண்டியிருக்கிறது.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s