அட்டாலியை விட்டிறங்கிய ட்ரங்கு பெட்டி

எல்லாமே எழுந்து எதிரில் வரச் செய்துவிடும் எழுத்து இருக்கிறது. ஒரு ஓவியத்தை போலவே கதையை சொல்லும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்தில் எல்லாமே எழுந்து எதிரில் வரத் தொடங்கிவிடும். உங்களால் ஒரு பாத்திரத்தை நெருங்கி முகர்ந்து பார்த்துவிட முடியும். தொட்டுப் பேசவும் முடியும். தங்களுடைய அளவில் ஒவ்வொருவருமே முழுமையானவர்களாக இருப்பார்கள். வெறுமனே அவர்கள் வார்த்தைகளை அடுக்கும்போது உருவாகிவிடக் கூடியவர்களாக இருந்தால், இங்கே எல்லாருமே எழுத்தாளராகிவிடலாம். ஆனால், அது அத்தனை எளிதானதாக இருப்பதில்லை.

ஓவியத்தை வரையலாம். ஓவியம் போல எழுதுவதற்கு முடியுமா? சத்தியமாக வார்த்தைகளை குழப்பியடிப்பதை பற்றி பேசவில்லை. நானுமே அப்படியானவற்றை வாசிக்கிற பொறுமை கொண்டவனில்லை. மொழியை கூர்மைப்படுத்துவதை ஒவ்வொரு எழுத்தாளரும் செய்கிறார்கள். தங்களது வாங்கியங்களை திருத்தி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். மொழிக்கூர்மை என்பதை வார்த்தை தேர்வு என்று எளிமைப்படுத்திக் கொள்வோம். ‘ஓவியம் போன்ற எழுத்துக்காகஅதில் கொஞ்சம் நெகிழ்வை எற்டுத்திக் கொள்ளலாம். இப்பொழுது வாக்கியங்கள். இவற்றோடு நம்மால் சமரசம் செய்ய முடியாது. அப்படியான முயற்சியை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வாக்கியங்களை அமைக்கிற முறையை மட்டுமே கையாண்டு ஓவியம்போன்று எழுதுவதை முயன்று பார்க்கறார் ஜீவ கரிகாலன்.

trunku-petti

என்னுடைய வாசிப்பு முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமானது (பலவீனமே அதுதான்). என்னால் ஒரு கதையை, கதையாக மட்டுமே வாசிக்க முடியாது. அதாவது, அது உண்மையிலேயே கதையாக இருக்கும் பட்சத்தில். அதிலிருக்கிற ஒவ்வொன்றையும் உணர மட்டுமே முடியும் என்பதாலேயே அவற்றின் நுட்பங்களை முதல் வாசிப்பில் கவனிக்கிற இயல்பு எனக்கில்லை. ட்ரங்கு பெட்டிக் கதைகள் வெளியீட்டுக்கு நான் சென்னை சென்றிருந்தேன். அன்றைக்கு இரவிலேயே கொச்சினுக்கு திரும்ப வண்டியேறியும், கையோடு கொண்டு வந்த பிரதியை வாசித்து முடிக்கிறவரை கொச்சின் வராது என்ற சொல்லிவிட்டார்கள். முன்னால் சென்ற ரெயில் விபத்தை சந்தித்ததால் காலையில் சேரவேண்டிய நான் மாலையே சென்று சேர்ந்தேன். என்னோடு இடத்துக்காக மல்யுத்தம் புரிந்து கொண்டிருந்த சகபயணிளை சமாளித்த பிறகு உறங்கியிருந்த போதும் போதுமானதாக இல்லை. திருப்பூரை தாண்டியதும் வாசிக்கத் தொடங்கி, திரிஸ்ஸூர் தாண்டும்போது வாசித்து முடித்திருந்தேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்தை தந்திருந்தது. அப்போதைய வாசிப்பில் மேற்கிலிருந்து என்கிற கடைசி கதை நிறைய தாக்கத்தை உண்டு பண்ணியது.

அந்த பயணத்தின் பிறகான தினப்படி அலைச்சலில் தொகுப்பை மறந்திருந்தேன். ஆனால், அந்த தொகுப்பில் இருந்த ஓவியங்களும் அதை பெற்றுக் கொண்டிருந்த கதைகளும் எனக்கு அவ்வப்போது ஜீவ கரிகாலனுடன் பேசும்போது நினைவில் வந்து கொண்டிருந்தது. நான் தொகுப்பை வாசித்துவிட்டிருந்தேன் என்பதை அவரும் அறியவில்லை. அதைப்பற்றி நாங்கள் பேசவே இல்லை. இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்க விரும்பிய புத்தகங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, பயமாய் இருந்தது. கொஞ்ச நாட்களாக நான் வாசிப்பதையும், எழுதுவதையும் ஆங்கிலத்திலேயே செய்து கொண்டிருந்தேன் என்பதும் நினைவில் உறுத்தியது. நிறைய எழுத நினைத்து தேங்கியிருந்ததுதான் காரணம். உடனே விட்ட இடத்தில் இருந்தே தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன். இப்போது இரண்டாவது வாசிப்புக்கு பிறகு, ட்ரங்கு பெட்டி கதைகள்.

trunku-petti-back

தொகுப்பின் முதல் கதையும், தூத்துக்குடி கேசரி என்கிற கதையும் எளிமையானவை. முதலாவது சமூகத்தை கே(லி)ள்விக்குள்ளாக்கி சிரிக்கக்கூடிய கதை என்கிற அளவில் முக்கியமானது. நமீதா நாட்டுக்கோழி கடை என்கிற வரியை வாசித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? பின்னது, விகடனுக்காக பட்டி பார்க்கப்பட்ட கதை என்கிற அளவில் மேலோட்டமானது.

பொதுவாகவே ஜீவ கரிகாலன் முயல்வது மேலே சொல்லியதை போல ஓவியம் போன்ற எழுத்து‘. அதன் உச்சமாக மூன்று கதைகள். ஒமேகாவின் லீனியர் வரலாறு, வசந்த மண்டபத்தின் சாபம் மற்றும் கோடுகளில் நெளியும் காதல். முதலிரண்டும் தலைக்கு மேலாக ஒரு களத்தில்நிகழக்கூடியவை. ஒருவிதத்தில் தொகுப்பின் அத்தனை கதைகளுமே காதலை(!) பேசக்கூடியவை என்றாலும், ஒமேகாவின் லீனியர் வரலாறு பேசுவது மானுடத்தின் காதல். வசந்த மண்டபத்தின் சாபம் கதையில் இருக்கிற precision, அய்யோ என்று என்னை கதற வைத்துவிட்டது. கொஞ்சம் பிசகினால் Clichéவாகிவிடும், என்கிற இடங்களை அவர் கடந்து போகிற விதம். Balanced.

சமணம் சார்ந்த, மறுபிறப்பு நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட கதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மஞ்சள் பூ, அப்படியான அடிப்படையை முற்றிலும் வேறுவிதத்தில் அணுகுகிறது. ஒரு தந்தையையும், சிறுமியான மகளையும் மட்டுமே கொண்டு சொல்லப்படுகிற கதை. ஒரு அந்நிய நிலத்தில் கதை நிகழ்கிறது. இறப்புக்கும், பிறப்புக்கும் இடையிலான வாழ்கையை கதையாக்கி இருக்கிற வித்யாசமான முயற்சி. வர்ணனைகளுக்கான விவரங்களுக்காக அவர் செய்கிற ஆய்வை இந்த கதையில் உணர முடிந்தது. பனி பொம்மையை பற்றிய விவரங்கள் போல, துருத்திக்கொண்டு எங்கும் தெரியாது.

மேற்கில் இருந்தும், தேய்பிறையும் பகிர்ந்து கொள்ளும் ஒற்றுமை பேசுகிற பொருளில் இருக்கிறது. அன்பையும் காதலையும், மரணத்தை பற்றி பேசுவதால் கேள்வி கேட்பதற்கு முனைவதால் இருவேறு கதைக்களன்களை தாண்டி ஒன்றாகிறது. தேய்பிறையில் இருப்பதை ஒரு முதிர்சியான அணுகுமுறை என்று சொல்லலாம். மேற்கில் இருந்து கதையில் இருக்கிற கதாபாத்திரம், தன்னுடைய உணர்வுகளால் பந்தாடப்பட்டு அலைவுறுகிற கதாபாத்திரம். தேய்பிறையில் வரக்கூடிய கதாபாத்திரத்துக்கு நேரெதிர். தன்னை பாத்திரமாக வைத்து ஜீவ கரிகாலன் கதை சொல்லும்போதும் அவர் அவற்றில் காட்டுகிற வேறுபாடுகள் எனக்கு நல்ல craft’ன் அடையாளமாக தோன்றியது. எந்த ஒரு Identical கதாபாத்திரத்தையும் நம்மால் சுட்டிக் காட்டிவிட முடியாது. அளவுக்கு அதிகமான பாத்திரங்களும் இல்லை, வர்ணனைகளும் இல்லை.

மென்மையாக நம்மை சீண்டிவிடக்கூடிய கதை, தொடுதல். ஒரு பதின் பருவத்தினனாக, அவர் எழுதியிருந்த சந்தேகக் கண்களை அடிக்கடி கடக்க நேர்கிற ஒருவன் நான். பெரும்பாலான சமயங்களில் எத்தனை அருவருக்கத் தக்கதாக அந்த பார்வை அமைந்துவிடுகிறது! நிஜ வாழ்கையில் ரொம்ப நல்லவனாகவேஇருப்பதால், நிறைய கோபம் வருகிறது பெரும்பாலானோரின் அபத்தமான எண்ணங்களை தாண்டிவரும்போது. கேரளாவை ஒப்புநோக்க தமிழ்நாட்டில் இப்படியான மனநிலை அதிகம்.

காட்சி என்கிற சிறுகதை ஒரு விதத்தில் தத்துவார்த்தமானது. இதையும் கேலி செய்யும் கதையாக எடுத்துக் கொள்ளலாம். ரசனையை பற்றிப் பேசுகிறது. ஆனால், நம் ஆச்சர்யங்கள்(!) நிறையப்படும் மழுங்கிய ரசனையை சொல்லி முடிக்கிறது. ஒருவேளை ரசித்திருக்க வாய்த்திருந்தால் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கத்திய வாழ்கை முறையிலும், நம்முடைய வாழ்கை முறையிலும் ஒரு சம்பவம் எப்படியான முடிவுகளை நோக்கி நகரும் என்பதை எடுத்துக்கொண்ட கதை. Parallelஆக நடக்கிற கதை, தோற்றத்தில் இருவேறு கதைகளாகிவிடும். இந்தக்கதையிலும் அவருடைய விவரங்களுக்கான ஆய்வு அருமையாக பலனளித்திருக்கிறது. முதல் வாசிப்பில், என்னால் நம் பண்பாட்டில் நடக்கிற கதையோடு மட்டுமே ஒன்ற முடிந்திருந்தது. இரண்டாவது வாசிப்பில், இரண்டு கதைகளையும் அவர் சமமான சிரத்தையோடு எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

ஏற்கெனவே ஜீவ கரிகாலன் அடுத்த தொகுப்புக்கான கதைகளை எழுதத் தொடங்கிருந்தார். இந்த தொகுப்பில் சேர்க்காத கதைகளையும் வைத்திருப்பார் போலிருக்கிறது. ஆனால், இந்த தொகுப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டே அடுத்த தொகுப்பு இருக்கும். அதற்கான professional craftsmanship அவரிடம் இருக்கிறது. அவருடைய தனித்துத் தெரியும் எழுத்துமுறையை, எப்படி மேம்படுத்துவார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. பதிப்பக, கணையாழி இதழ் பணிகளுக்கிடையே அவர் தன்னை பந்தாடிக் கொண்டிருக்கிறார். அடுத்த தொகுப்புக்கு இப்பொழுதே ஒரு வாழ்த்தை சொல்லிவிடலாம்.

வாழ்த்துக்கள் அண்ணே!

நாகபிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s