சிறுகதை பயிலரங்கு 2017

இந்த கட்டுரை காலச்சுவடு இதழில் இங்கே வெளியாகி இருக்கிறது. அதற்கான மாற்றங்களோடு, தனிப்பட்ட வகையில் எழுதியவையும் சேர்த்த கட்டுரை இது.

ஏற்கெனவே பயிலரங்குக்கு தேர்வான அனைவரும் ஒரு வாட்ஸாப் குழுமத்தில் உரையாடத் தொடங்கியிருந்தோம். எவரும் எவரையும் அறிந்திலர் என்ற உற்சாகத்தில் தாக்க அணங்கின் தானை கொண்டு மற்றவர் கதைகளை தாக்கிக் கொண்டிருந்தோம். இந்த விமர்சனங்களுக்கு அஞ்சி குழுமத்திலிருந்தும் ஒரு பதிலும் அனுப்பிவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தவர் சிலர். இந்த பயத்திற்கு மேலும் உறுதி சேர்க்க மூன்றாம் நாள் ஒரு சிறுகதை விவாதத்திற்கு பகிரப்பட்டது. எங்களுக்குத் திக்கென்றாகியது. வகுத்தாரை மிஞ்சிய தொகுத்தானாய் தான் நின்ற கிருஷ்ணபிரபு இல்லாது அந்த கதையை நாங்கள் விளங்கிக் கொண்டிருக்கவே இயலாது. நான், பிரார்த்திக்கத் துவங்கி இருந்தேன். இப்படியாக பெரிய அளவிலான விஷயங்களை விவாதிக்கிற இடமாக பயிலரங்கு அமைந்து விடக்கூடாது என்று.

67_1

மூன்று நாட்கள் திண்டுக்கல்லின் அய்யம்பாளையத்தில் பயிலரங்கு (10-11-12 பிப்ரவரி 2017). கவிஞர் சக்தி ஜோதி தன்னுடைய இடத்தை பயன்பாட்டுக்கு வழங்கி இருந்தார். லாவண்யா சுந்தரராஜன் மற்றும் காலச்சுவடு பதிப்பகம் நிகழ்வுக்காக இணைந்திருந்தார்கள். முதலிலேயே சொல்ல வேண்டும். எளிமையாக வடிவமைக்கப்பட்ட பயிலரங்காக அமைந்திருந்தது. மேலும், பங்கேற்பாளர்கள் பெரும்பாலானோர் என் சக! வயதினர். தீவிரமான வாசகர்களாக இருப்பவர்கள் அதிகம். ஆனால், எல்லோரும் எழுத்தில் தங்களை முறைப்படுத்திக் கொள்ள விழைபவர்களாக இருந்தார்கள். எனவே பயிலரங்கின் நோக்கு அதையொட்டியே இருந்தது.

uyirodai_kalachuvadu_workshop_2017_095 சக்தி ஜோதி

நம் மொழிச் சூழலில் பயிலரங்கும் கருத்தரங்கும் நடத்த வேண்டியவர்களின் மனப்போக்கையும் அறியாமையையும் குறிப்பிட்டு சொல்லி நோக்கவுரையைத் தொடங்கினார் பெருமாள் முருகன். சிறுகதையை பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை சுகுமாரன் வழங்கினார். அன்றைய தினத்தின் முக்கியமான உரையாக மதிவாணனின் உரை அமைந்தது. வீரமாமுனிவர் உரைநடை இலக்கியத்தை இங்கே அறிமுகப்படுத்தியது, தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ தொடங்கி, தற்காலம் வரையிலான சுருக்கமான வரலாறு. நவீன இலக்கியத்தின் தொடக்கம் மற்றும் வாசிக்க வேண்டிய அது தொடர்பான புத்தகங்கள் குறிப்பிடப்பட்டன. எண்பதுகள் வரையிலான சிறுகதைகளைப் பேசியிருக்கும் சுந்தரராஜன் சிவபாத சுந்தரம் எழுதிய புத்தகம். தமிழினி 2000 – சிறுகதை பற்றிய கட்டுரைகள். மேலும் பல சிறுகதைகள், புத்தகங்கள் பற்றிப் பேசினார்.

uyirodai_kalachuvadu_workshop_2017_023 பெருமாள் முருகன், மதிவாணன்

/ஆரம்பம் முதல் தமிழில் உண்டாகி வளர்ந்த வெகுமக்களுக்கான போக்கினை பற்றிய உரையாடல் சுவையானது. எஸ்.எஸ்.வாசன் அவர்கள் விகடனை எடுத்துக்கொண்ட பின்னர் மாற்றிய விதம். அதை சார்ந்து இயங்கிய எழுத்தாளர்கள். அப்போதைய காலகட்டத்தின் போக்குகள். சி.பா.ஆதித்தனார் முன்னெடுத்த பத்திரிக்கை துறை மாற்றங்கள். மதிவாணன் அவர்களின் இளமையில் தொட்டு அவருக்கு இருந்த ஜெயகாந்தனின் எழுத்துக்களின் மீதான காதல். அவருடைய மு.வ பற்றிய மூத்த தலைமுறையினருடனான உரையாடல். இந்த தலைமுறையினை அவர் பார்க்கும் விதம். ஜெயகாந்தன் எழுத்துக்கள் பழைய வடிவத்திலேயே அச்சில் இப்போது வந்ததை அவர் உடனே வாங்கி வைத்ததாக குறிப்பிட்டார்.

இயல்களுக்கும், இயங்களுக்குமான வேறுபாடு பேசப்பட்டது. இங்கே நம்மிடத்தில் இயல்பாக செயல்பாட்டு அறிவியக்கங்களாக கிளைத்து வளர்ந்தவை (மார்க்ஸியம், பெண்ணியம்) எடுத்துக் கொண்ட பெயர்களுக்கும், அப்படி ஆழ வேறூன்றாதவை பெற்ற இயல் என்று முடியும் பெயர்களுக்குமான வேறுபாட்டை சுட்டிக் காட்டினார். அதை பற்றிய ஒரு சிறிய விவாதம் உருவானது.

பெருமாள் முருகன் எப்படி கதை எழுதத் தொடங்கினார் என்று விரிவாகப் பேசினார். அசோகமித்திரனின் அஞ்சல் அட்டை கணையாழியில் இருந்து வந்ததையும், அதற்காக அவர் அடைந்த மகிழ்ச்சியையும், அவருடைய சில கதைகளை எடுத்துக்கொண்டு, அதற்கான பயணத்தை விவரித்தார். கு..ரா. போல தானும் தன்னுடைய கதையின் உருவாக்கத்தை பற்றிப் பேசும்போது, கவனத்துடன் இருந்து வாசகன் அடைந்திருக்கக்கூடிய ஒரு மேலான உணர்வை துடைத்தெறிந்துவிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.

அன்றைய நாள் சிறப்புப் பார்வையாளராக பழ. அதியமானும் பங்கேற்றிருந்தார்.

ஒரு நாவல் தன் முதல் பத்தியிலும், சிறுகதைகள் முதல் வரியிலுமாகத் தொடங்குகின்றன என்று தன்னுடைய பேச்சில் சொன்னார் க. மோகனரங்கன். அத்தனை வடிவங்களுக்கும், கருப் பொருள்களுக்கும் தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தனை மற்றும் தி. ஜானகிராமனை நாம் பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்கிற கருத்துடன் தன்னுடைய உரையைத் தொடங்கினார். கு. அழகிரிசாமி எப்படி சிறிய விஷயங்களை எடுத்து விரிவாக்குவார் என்பதையும் சொன்னார். அவரது கதைகள் கத்திமேல் நடப்பதைப் போன்ற களங்கள் கொண்டவை. அசோகமித்திரனின் கதைகளை மீண்டும் அவர் ஆரம்பத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கியபோது, எப்படி அவரின் மொழி காலம் கடந்தும் தன்னை தக்கவைத்துக் கொள்கிறது என்பதைக் குறிப்பிட்டு பேசினார். அவரின் படைப்புகளில் உண்டாகிற ஊடுகதை (subtext) மற்றும் சொல்லாமல் சொல்லிச் செல்லும் தன்மையையும் ஹெமிங்வே, வில்லியம் பாக்னர் தொடங்கி இருந்துவரும் உரசல் பற்றியும் பேசினார்.

/எனக்கு connotation பற்றிய என்னுடைய வாசிப்புகள் நினைவுக்கு வந்தன.

uyirodai_kalachuvadu_workshop_2017_004 க.மோகனரங்கன்

களந்தை பீர் முகம்மதுவின் உரையின்போது நாங்கள் சிரிக்காமல் இருக்கக் காரணம் தேட வேண்டி இருந்தது. ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கதைகளின் கதையைச் சொன்னார். அதையும் மிஞ்சும் வகையிலான கதை, அவரைக் கண்டுபிடித்துப் பரிசளிக்க இலக்கியச் சிந்தனை முயன்றது என அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றி பேசியவை அத்தனையும் நினைவில் நிற்கிறது.

Uyirodai_Kalachuvadu_Workshop_2017_035.jpg களந்தை பீர் முகம்மது

/நிகழ்வில் எனக்கு மிகவும் நெருக்கமான உரையாக அமைந்தது பாவண்ணன் அவர்களுடையது. அவர் முதல் கதை எழுதியதை பற்றி சொன்னது, மேலும் நிகழ்வில் பேசிய மற்ற அனைத்தும் நம் பால்யத்தோடு தொடர்புடையதாக இருந்தது. சாப்ளினுடைய படங்கள், டிக்கென்ஸின் நாவல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்கை மேலும் அவர் சொன்ன கதைகளுக்குள்ளும் எப்படியோ நாம் இருக்கிறோம். செக்காவின் வான்கா போலத்தான் நாம் கடிதங்கள் எழுதித் தவிக்கிறோம். அந்த ரயில் நிலையத்தில் சிரித்துவிட்டு வீடு திரும்பும் ஒரு இளைஞனாகத்தான் நாம் நம்முடைய சகோதரனுக்காக திரும்பிப் பார்த்தபடி நடக்கிறோம். அவரிடம் நான் இன்னும் எழுதவிருப்பவற்றை சொன்னேன். ஏன் என்றும்.

Uyirodai_Kalachuvadu_Workshop_2017_001.jpg பாவண்ணன்

/முனைவர் குருவம்மா அவர்களின் குரல் இன்னும் எதிரொலிக்கிறது. மேடை பேச்சாளர்களின் மொழித் திறனுடன் பேசினார். அவருடைய உரையின் மையப்புள்ளி இரண்டு. ஒரு எழுத்தாளன் தீர்வுகளை முன் வைக்கிறவனாக இருக்கவேண்டும் என்பதும், முதல் மையம் முடிவு என்னும் அமைப்பு முறை (plot) பற்றியும். இதை ஆக்கப்பூர்வமாக எழுத்தாளனின் தீர்க்கமான பார்வையை பற்றிய கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான அமர்வுகள் உரைகளாக இல்லாமல் உரையாடல் தன்மையை கொண்டிருந்தன. இதற்கு காரணம் சுகுமாரன். மெளனி போலவும் எழுதிப் பார்க்கலாம், ஆனால் பஷீரை போல எழுதுவது சிரமம் என்கிற வரியும் அப்படியான உரையாடல் அமர்வு ஒன்றில் நான் கேட்டது. எழுத்தாளர் ஜெயமோகனின் நவீன இலக்கிய அறிமுகம் புத்தகம் வாசிக்க வேண்டிய ஒன்றாக பரிந்துரைக்கபட்டது. ராஜேந்திர சோழன், கந்தர்வன் முதலானோர் விதிகளை மீறுபவற்றை எழுதுபவர்களாக அறிமுகம் செய்யப்பட்டார்கள். அசோகமித்திரன் மீண்டும் மீண்டும் விதிகளுக்குள் இருப்பவற்றை எழுதியிருப்பவர் என்பதும் சொல்லப்பட்டது.

Uyirodai_Kalachuvadu_Workshop_2017_008.jpg சுகுமாரன்

மூவர் குழுக்களாகப் பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டு, குழுவுக்குத் தலைமை ஏற்ற எழுத்தாளர்கள் குழு உறுப்பினர்களின் கதைகளில் இருந்த நிறைகுறைகளை விளக்கி உதவினார்கள். இன்னும் என்னென்ன அவர்கள் எழுதச் சாத்தியம் என்று சொன்னார்கள். ஊக்கு வித்தார்கள். அவரவர் தங்களது கதையைச் சொந்தக் குரலில் முழுவதும் வாசித்தோம். மேலும் அன்று சுந்தர ராமசாமியின் சிறுகதை ‘பிரசாதம்‘ வாசிக்கப்பட்டு, பாலு மகேந்திராவின் ‘கதை நேரம்’ திரையிடலும் நடந்தது.

கே.என். செந்தில் தன்னுடைய அமர்வை முழுவதுமே உரையாடல் தன்மையினதாகப் பார்த்துக்கொண்டார். தன்னுடைய இயல்பான கேள்விகளால் அவர் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் தவற விட்டிருக்கக்கூடிய விஷயங்களைப் பெற வைத்தார். 2000வது ஆண்டுக்கு பிறகான சிறுகதையின் களங்களைப் பற்றியதாகவும் அவருடைய பேச்சு அமைந்திருந்தது. அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா ஆகியோர் முக்கியமாக வாசிக்கப் பட வேண்டியவர்கள் என்பதை குறிப்பிட்டார். நிஜத்தில் தான் அறிந்திராத மனிதர்களையும் களங்களையுமே கொண்டு எப்படி எழுதிவருகிறேன் என்றும் பேசினார். அதை அவருடைய பேச்சின் பிரதான புள்ளியாக கொள்ளலாம்.

uyirodai_kalachuvadu_workshop_2017_079 நான், கே.என்.செந்தில்

குமாரநந்தன் எப்போதும் போலவே எளிமையாக பேசினார். ஆனால், அவருடைய முன்னெப்போதைய உரைகளை விடவும் இதை சிறந்தது என்று குறிப்பிட முடியும். நேர்ப்பேச்சில் ஆழமாகப் பேசினால் நான் பயந்துவிடுவேன் என்றே மென்மையாக பேசி அனுப்பிவிடக்கூடிய மனிதர் அவர். அவர் மேலும் பேசியிருக்க அவர் பேச்சில் முகாந்திரங்கள் இருந்தன. மேலும் எதிர்பார்த்திருக்கவே பேசி முடித்து உட்கார்ந்துவிட்டார். தன் கதைகளின் பிறப்பு பற்றி சொன்னார். அவரின் இரண்டாவது தொகுப்பில் இருக்கிற சில முக்கியமான கதைகளை பற்றி பேசாமல் விட்டுவிட்டார் என்கிற வருத்தம் எனக்கு இருந்தது.

uyirodai_kalachuvadu_workshop_2017_101 குமாரநந்தன் (நடு நாயகம்)

மூன்றாம் தினத்தில் விடுபடலின் தொடர்ச்சியாக, பாவண்ணன் அவர்களுடைய பெண் படைப்பாளிகள் பற்றிய உரையாடல். கவிதை எனும்போது நீண்டுகொண்டே போகிறது பட்டியல், ஆனால் சிறுகதையில் பெண்களின் பங்களிப்பு குறைவு என்றார். பங்கேற்பாளர்களில் இருந்த லாவண்யா, ரேவதி முகில் மற்றும் கிருத்திகா ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசினார். சங்க காலத்தின் இருபத்தி ஆறு பெண் கவிகளில் தொடங்கி பெண்களின் பங்களிப்புகளை அறிமுகப்படுத்தினார். ஆவுடை அக்காவின் கவிதைகளை பற்றிப் பேசினார். அவருடைய பெயர் பரவலாக அறியப்படாமல் இருக்கிறது. பாரதிக்கும் முன்னோடியாக இருந்தவர் அவர். முதல் பெண் பத்திரிகை ஆசிரியர், நாவல் எழுதியவர் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்கிற வை.மு. கோதைநாயகி அம்மாளின் அறிமுகம். 1966ல் வெளிவந்த கிருத்திகாவின் வாஸவேச்வரம் என்கிற நாவலின் முக்கியத்துவம். ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி (சாகித்ய அகாதமி பெற்றவர் (லக்ஷ்மி அவர்களின் மற்ற பங்களிப்புகள் பற்றியும் பேசப்பட்டது), சூடாமணி, அம்பை ஆகியோரின் படைப்புகள். பாமா மற்றும் சிவகாமி ‘பழையன கழிதல்’. அடுத்த தலைமுறையினவர்களாக வாஸந்தி, இந்துமதி, சிவசங்கரி. உமா மஹேஸ்வரி ‘யாரும் யாருடனும் இல்லை’ அவர்களுடைய நாவலின் முக்கியத்துவம் ஆகியவையும் பேசப்பட்டன.

uyirodai_kalachuvadu_workshop_2017_116 பிரேமா சுகுமாரன், கிருஷ்ண பிரபு

கவிஞர் சுகுமாரன் மனைவி பிரேமா பேசிய ஐந்து நிமிடங்கள் பற்றி எழுத, ஒரு சிறுகதை எழுத வேண்டியிருக்கும். அந்த பேச்சின் போது, நான் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த வண்ணம் இருந்தேன். கடவுளே, என்ன ஒரு அன்பின் தருணம்.

Uyirodai_Kalachuvadu_Workshop_2017_132.jpg லாவண்யா

நிகழ்வின் நன்றி உரையாக லாவண்யா இந்த பயிலரங்குக்கான எண்ணம் உருவானது, சிறுகதை என்கிற வடிவத்தின் மீது தனக்கு இருக்கிற ஆர்வம் காரணமாக என்று சொன்னார். அதனால் இந்த முயற்சியை ஒரு சுயநலமான முயற்சி என்று சொல்லிக் கொள்ளவும் முயன்றார். பங்கேற்பாளர்களுக்கு கை நிறைய புத்தகங்களும், காலச்சுவடு புத்தகங்களுக்கான ஆயுள் சந்தாவும் தரப்பட்டது. புகைப்படங்கள் எடுத்துத் தந்தவர் அர்ஜுன்.

uyirodai_kalachuvadu_workshop_2017_200 அர்ஜுன்

/இன்னமும் இந்த நிகழ்வுக்காக நாங்கள் அங்கே தங்கியிருந்த மூன்று நாட்களை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது. முக்கியமாக மூன்று நாளை, நான்கு நாட்களாகவோ அதற்கு மேலாகவோ ஆக்கிக் கொள்ளும் ஆவலில் எவருமே நன்றாக துயின்றிருக்கவில்லை. முக்கியமாக இரண்டாவது தினம் நாங்கள் எல்லோரும் உறங்கப்போனது இரவு இரண்டரைக்கு மேல். ஆனால், காலையில் ஆறு மணிக்கே எழுந்து அருகில் இருக்கிற மருதா நதி அணைக்கு கிளம்பி விட்டோம். நிறைய நண்பர்கள் கிடைத்தார்களா என்று உற்சாகத்திலேயே இருந்தோம். குட்டித் தோழி (ஹேமா) ஒருத்தியோடு புகைப்படம் எடுக்க போட்டியிட்டோம். மூன்றாவது நாள் கிளம்பும் போது இன்னொரு நாள் இருப்போமே என்று தோன்றியது. ஓவியர் சீனிவாசன் நடராஜனுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது, நண்பன் அருண் அந்த உரையாடலை தொடர்ந்து முன்னெடுத்ததால் என்னை பேருந்து ஏற்றி அவன் என்னை அனுப்பி விடும் வரை அப்படியே வாய்ப்புரட்சி செய்து செய்து மனதை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.

uyirodai_kalachuvadu_workshop_2017_168 நான், ஹேமா

/எனக்கு குறிப்புகள் எடுத்து பழக்கம் இல்லை. எடுத்த குறிப்பு இதில் இருக்கிற புத்தகங்கள் பெயர்கள் மட்டுமே (அதுவும் முழுமையில்லை). ஏனையோர் எடுத்த குறிப்புகளை பகிர்ந்தாலோ, எழுதிவிட்டாலோ கொஞ்சம் பிட்அடிக்கலாம் என்று காத்திருந்தேன். கெஞ்சியும் பார்த்தேன், எவரும் இசைந்து கொடுக்கவில்லை. இப்போது நண்பர் பாலகுமார் அவர்களின் கட்டுரை வெளியாகி இருக்கிறது. இருந்தும், எழுத்தாளர்கள் பேசிய வரிசை மாறி இருக்கிறது. எந்த தினத்தில் எவர் பேசியது என்கிற குழப்பம் இன்னும் தீர்ந்த பாடில்லை. சரியான வரிசை தெரிந்தோரை, அந்த வரிசையில் படித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஆனால், உண்ட உணவுகளை பற்றிய பட்டியல் வேண்டுமானால் மின்னஞ்சல் செய்யவும். தொடுகறிகளின் கூடக் குறைச்சல் உட்பட வரிசை மாறாது குறித்து அனுப்புகிறேன். தகவல்கள் விட்டுப் போயிருந்தால், நண்பர்கள் எழுதினால் அதை பகிர்ந்து சரிக் கட்டுகிறேன்.

– நாகபிரகாஷ்
17 பிப்ரவரி 2017

Advertisements

3 thoughts on “சிறுகதை பயிலரங்கு 2017

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s