உ.வே.சாவின் ஆவியும், டின்னவேல்லி ஜில்லாவும் – ஒரு கடிதம்

திரு. எஸ். ரமேஷ் அவர்களுக்கு,

இப்படியான உ.வே.சா தனமான தேடல் கொண்ட முயற்சிக்கு இந்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எப்படி நன்றி தெரிவிப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். புத்தகத்தை தேடியெடுத்து வாசிக்கவாவது செய்யலாம் என்று இணையத்தை திறந்தேன். கொஞ்ச நேரத்தில் எனக்கு ஒரு சமாதானம் கிடைத்துவிட்டது. எப்படியான நன்றியானாலும், டொரன்டோ பல்கலையை சேர்ந்த எவர் செய்வதையும் என்னால் செய்துவிட முடியாது. நாகரீகத்தில் பின் தங்கிய தமிழர்களின் பேய் நடனங்களை பற்றியும், பேய் வழிபாடு பற்றியும் குறிப்பிட்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதாலேயே உ.வே.சா அதை மீட்டெடுப்பதில் விருப்பம் இல்லாமல் ஆவியாக வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம். உ.வே.சா காலத்தில் ஓலைக்குவியல்களின் நடுவில் இருக்க சாத்தியமான பொக்கிஷங்களின் மேல் ஆர்வம் கொண்டவர் என்று எவரும் இல்லை. அவருடைய முயற்சிகள் எந்தவொரு காரணத்தாலும் செய்யப்பட்டவை அல்ல, வெறுமனே காதலால்.

கால்ட்வெல் தன்னுடைய (A comparative grammar of the Dravidian or South-Indian family of languages) புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (1875) தான் இன்னமும் ஆழ்ந்து நிறைய கற்றது இந்த இடைவெளியில் என்று குறிப்பிடுகிறார். முதல் பதிப்புக்கு பத்தொன்பது வருடங்களுக்கு பிறகு வந்ததே இரண்டாம் பதிப்பு . அதற்கேற்ப மாற்றங்களுக்கும் இரண்டாம் பதிப்பு உட்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மதமாற்றத்தை நோக்கமாக கொண்டு இங்கே வந்து உட்கார்ந்த ஒருவரின் பார்வையில் தன்னுடையது அல்லாத எந்த மத நம்பிக்கையும் பாவகாரியமே என்பது எல்லோருக்கும் புரியக்கூடியதுதான் என்று நம்புகிறேன். இந்த மண்ணிலேயே வாழத்தொடங்கிய பின்னர் அவருக்கு ஏற்படுகிற பிணைப்பின் முதிர்விலேயே அந்த எண்ணம் விலகிச் செல்லக்கூடும். அதைப்பற்றிய விவாதம் இங்கு வேண்டாம்.

இன்றைக்கு உ.வே.சாவாக ஆவதற்கு நிறைய பேருக்கு ஆசை வரலாம். ஆனால் அன்றைக்கு எவரொருவர் உ.வே.சா என்ற பெயர்கொண்டவர் தன் தேடலை இறுதிவரை தொடர்ந்தாரோ, இன்றைக்கும் அவரே உ.வே.சா என்று அழைக்கப்படுவார். அவர் தெருத்தெருவாக அலைந்தது, தமிழ்நாட்டு பேய் வழிபாடுகளை உலகறியச் செய்யும் நோக்கில் அல்ல என்று நான் மட்டும் அல்லாமல் தமிழகமே நம்புகிறது. தமிழர்களே அறியாத பொக்கிஷங்களை தேடிய பயணம் அது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அப்படியான ஒரு பொக்கிஷத்தை கண்டெடுத்து நீங்கள் உலகினுக்கு அளித்திருந்தால் இன்னொரு உ.வே.சா என்கிற கணக்கில் சேர்வதற்கான உங்கள் கட்டுரை முயற்சியை பெருமையோடு வரவேற்றிருக்கலாம்.

இல்லாமல் கால்டுவெல்லுக்கு ஆரம்ப காலகட்டத்தில் (அல்லது இருந்துவிட்டு போகட்டுமே இறுதி வரைக்குமே) இருந்த நாட்டார் தெய்வ வழிபாட்டின் மீதான எரிச்சலை பற்றியும், தீவிரமான மதமாற்ற நோக்கையும் அவர் அவற்றை பற்றி எழுதியவற்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவது உங்கள் நோக்கம் என்றால் நீங்கள் நல்ல ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கலாம். அதாவது நீங்கள் சிரமத்துக்கு உங்களை உள்ளாக்கி தட்டச்சு செய்த புத்தகத்தை மின்னஞ்சலில் ஏதோவொரு நாட்டில் இருக்கிற ஆய்வாளனுக்கு அனுப்புவதற்கான அவசரத்தை தவிர்த்து தீவிரமான அதன் பகுதிகளை மொழிபெயர்ப்பு செய்யவோ அல்லது அதன் மொத்தக்கருத்தின் மீதான விமர்சனத்தை சுருக்கமாக எழுதவோவாவது செய்திருக்கலாம்.

அதைவிடுத்து இந்திய மொழிகளில் முதன் முதலாக நடத்தப்பட்ட ஒப்பாய்வு ஒன்றை செய்தவரை, எவ்வித தயக்கமும் இன்றி உ.வே.சா போன்ற தமிழ் பெரியோர்களும் மொழியின் சார்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதரை, அவர் எப்படியானவராக இருந்தாலும், நீங்கள் இப்படியான மொழியில் பேசியிருந்தீர்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இல்லாவிட்டால் வேறு ஒருவர் அந்த ஆய்வை செய்திருக்கலாம். ஆனால், நானோ என்னுடைய தெருவில் எவராவதோ இதுவரை அப்படியான ஆய்வுகள் எதையும் செய்திருக்கவில்லை என்பதால் உறுதியாக என்னால் கூறமுடியவில்லை.

ஒரு முழுவருடம் கழிந்தும் நீங்கள் அந்த புத்தகத்தை இணையத்தில் பதிவேற்றியது கண்டுகொள்ளப்படாமல் போனதை நினைத்து வருந்திருயிருக்கிறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது. தமிழச்சூழல் அப்படித்தானே உ.வே.சா காலத்தில் இருந்து இருக்கிறது. இதற்காக நீங்கள் வருந்தலாமா? இப்போதும்கூட ஒன்றும் இல்லை. எப்படியாக இருந்தாலும் டொரன்டோ பல்கலையில் இருந்து விளக்கமாக ஒரு புத்தகம் வரக்கூடும். புத்தகத்தின் பெயரை மட்டுமாவது நல்லபடி வைக்கச் சொல்லி உங்கள் சார்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

– நாகபிரகாஷ்.21-டிசம்பர்-2016

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s