அச்சங்களற்ற படைப்பாக்க வாழ்கை

என்னுடைய ஒவ்வொரு படைப்பும் கொஞ்சமாக என்னை கொன்றது தன்னுடைய மரணத்துக்கு முந்தைய நேர்காணலில், நொர்மன் மெய்லர்.

சில நல்ல கவிதைகள் எழுதுவதும், ஒற்றை நல்ல கதையை எழுதுவதும் கூட ஒருவகை வதை. ஒரு கட்டுரை எழுதுவதை போல் இல்லாமல், ஒரு கதைக்கு வேறு விதமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சிறிய தகவலையும் தேடி எடுத்து கோர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக அதையெல்லாம் நம் மனம் செரித்தாக வேண்டும். அந்த கதையில் மொழிக்கேற்ப, தன்மைக்கு தகுந்தபடி அவற்றின் மனிதர்களுக்கு ஏற்றபடி மாற்ற வேண்டியிருக்கிறது. அதைக்கூட செய்யலாம். ஒற்றை கவிதையை கண்டெடுப்பது இயல்வதில்லை. சமீபத்தில் எழுதிய ஒரு நல்ல கவிதையை பயணம் ஒன்றில் பேருந்தில் அரைத்தூக்கத்தில் இருந்து விழித்து எழுதியபோது மணி 2, கைபேசி அடுத்த தினம் என்று காட்டியது. அதைப்போன்ற ஒரு பயணத்தில் மனதில் வந்த ஒரு கவிதை, என் ஆகச்சிறந்த கவிதையாக இருந்திருக்கக்கூடும் எழுதப்படவே இயலவில்லை. அதன் ஒற்றை வரியைக்கூட அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு என்னால் மீட்டெடுக்க முடியவில்லை.

அனுபவத்தில் இருந்து எழுதுவதை விட்டு, உண்மையில் முழுமையான படைப்பாக ஒன்றை எழுதுவதை சொல்கிறேன். ஒரு வரி எழுதுவது, பின்னர் அழிப்பது. அரை பக்கம் முடித்ததும் எழுத முடியாமல் போகும். இடையில் ஒரு மாதம் அதன் பக்கமே போவதற்கு தோன்றாது. கதை பாதியிலேயே நின்றுவிடும். என்னிடம் நிறைய கேள்விகள். முதலில், எப்படி படைப்பாக்கத்தில் ஈடுபடுவது?

ஆகச்சிறந்த ஐந்து டெட் உரைகளை ஒரு பதிவர் வரிசைப்படுத்தி தந்திருந்தார். அதில் முதலாவதாக இருந்தது எலிசபெத் கில்பெர்டின் படைப்பாக்கம் தொடர்பான உரை. சென்ற வருடத்தின் தொடக்கத்தில் அதை பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அய்யோ.

ஜீனியஸ் என்கிற கருத்தை அவர் விளக்கிய விதம் எனக்கு ஆச்சர்யத்தை தந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சியில் (Renaissance) 17, 18ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல், கலைகள் மற்றும் தத்துவத்தில் மதம் சார்ந்த இறுக்கமான நம்பிக்கைகள், ஆதிக்கத்தை மறுத்து தனி மனிதனையும், காரணத்தையும் முன் வைக்கிறார்கள். அதன் உச்ச கட்டம் 1950 வரையிலும். இன்றைக்கு நம் கண் முன்னால் இருக்கிற உலகம் அதனுடைய வளர்ச்சி, வீழ்ச்சிகளால் உருவான ஒன்று.

அப்படியான காலகட்டத்தில் தனி மனிதன் தன் படைப்பாக்கத்திற்கான பொறுப்பை தானே ஏற்கிறான். அதுதான் மிகப்பெரிய சுமையாக மாறியது. இப்போது ஏன் கொஞ்சம் மாற்றி யோசிக்கக்கூடாது என்பது எலிசபெத் கில்பெர்டின் வாதம்.

அந்த உரையின் முழுவதுமான வளர்ச்சி பின்னர் வெளிவந்த Big Magic, Creative Living Beyond Fear என்கிற புத்தகம். நேரடியாகச் சொன்னால் அந்த உரையை புத்தகமாக்கியிருக்கிறார். இது எல்லாவிதமான படைப்பாளிகளிடமும் இருக்கக்கூடிய (ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த) தன்னை வதைத்துக்கொள்கிற மனோபாவத்தை களைவதற்கு இந்த உலகத்தில் புதிதாக நுழைகிற படைப்பாளிக்கான புத்தகம். ஏற்கெனவே படைப்பாக்கச் செயல்பாட்டில் இருக்கிற ஒருவருக்கு இந்த புத்தகம் பொறுமையை சோதிக்கும். ஆனால் நமக்கு இருக்கிற படைப்பாக்கம் தொடர்பான அத்தனை கேள்விகளும் விவாதிக்கப்படுகிற புத்தகம். மேலும் மொழியாலும் அனைவருக்குமானது. ஆறு பகுப்புகளாக தரப்பட்டிருக்கும் புத்தகம், அதற்குள் நிறைய சின்னஞ்சிறிய பகுதிகள் கொண்டிருக்கிறது. எனவே எத்தனை முறை தள்ளிப்போட்டாலும் எடுத்தால் எளிதாக தொடர்ந்து வாசிக்கலாம். எலிசபெத் கில்பெர்ட் தன்னுடைய வணிக ரீதியான வெற்றியின் அடிப்படையில் கட்டமைக்கிற வாதங்கள் நிறைய, எனவே அதை வெற்றியாக ஏற்காமல் விமர்சித்தால் பலவீனமானது. நிராகரிக்கப்பட வேண்டியது.

எழுதத்தொடங்க ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. அதை பற்றியது தான் முதல் பகுதியும். வெறுமனே படைப்பாக்கம் மட்டுமல்ல, படைப்பூக்கமான எந்த செயல்பாடுமே முக்கியமானது என்கிறார். அதை செய்வதற்கான உந்துதலை பற்றி பேசுகிறார். அவர் அறிந்த மனிதர்கள் எப்படி அதை செய்தார்கள் என்றும் சொல்லிச் செல்கிறார். உங்களது படைப்பை பற்றி, அதை சார்ந்த செயல்பாடுகளை பற்றி எவரும் கவலைப்படுவதில்லை எனவே செயல்படுங்கள் என்று சொல்கிறார்.

இலக்கியம் உங்களை காதலிக்குமா என்ற கேள்வியை சூழியல் பேராசிரியர் ஒருவர் இயற்கை உங்களை காதலிக்குமா என்று தன் மாணவர்களிடம் கேட்கும் வழக்கத்தை வைத்து விவரிக்கிறார். அந்த மாணவர்கள் படிப்பது இயற்கையை பேணுவதில் கொண்ட விருப்பம் காரணமாக, ஆனால் பதிலுக்கு இயற்கை அவர்கள் மேல் அன்பு செய்வதில்லை அது வெறுமனே உள்ளுணர்வு இல்லாதது என்று நினைக்கிறார்கள். அங்கு தொடங்குகிறது நம்முடைய சமூகத்தின் பிரச்சனை.

முற்காலத்தில் மக்கள் பேரழிவுகளையும் இயற்கை சீற்றங்களையும், இயற்கையின் அதற்கான தெய்வங்களின் சீற்றமாக எண்ணினார்கள். அஞ்சினார்கள். அதன் எல்லைக்கும் அதனால் வகுக்கப்படுகிற எல்லைகளுக்கும் உட்பட்டவர்கள் தாங்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. இயற்கையால் கிடைக்கிற வளங்களும், மழை பொழிவும் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விஷயமாக இருந்தது. ஏன், நம்முடைய விழாக்கள் அத்தனையும் இயற்கையை சார்ந்தது தான். இயற்கையை பிரித்தெடுத்தால் தமிழ் இலக்கியம் கிடையாது. ஆனால், நவீன மனிதன் தன்னுடைய இயற்கையுடனான இந்த உறவை முறித்துக் கொண்டான். எனவே ஒரு வனத்தை சீரழிக்கிற போதும், ஏரிகளை ஆக்கிரமிக்கிற போதும், மணல் அள்ளுகிற போதும் அவனுக்கு எந்த ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லை. ஆயிரம் வருடங்களாக வீணாகத்தான் கிடக்கிறது இன்றைக்கு எனக்காவது பயன்படுகிறதே என்கிறான்.

*இந்த புத்தகம் நிச்சயம் படைப்பாக்கம் தொடர்பானது மட்டுமே. மேற்கண்ட பகுதி விதிவிலக்கு.

எலிசபெத் வெறொருவர் சொன்னதாக ஒரு உருவகத்தை சொல்கிறார்; நாம் நம்மை பார்க்க மாட்டாளா என்று ஏங்கும் அழகு பொருந்திய பெண்ணொருத்தி இந்த எழுத்து. ஒரு நாள் நம்மோடு சிரித்து பேசிவிட்டு நகர்வாள். அடுத்த தினம் யாரென்றே அறியாதவள் போல் கடந்து போவாள். இன்னொரு தினத்தில் இங்கே நாயகன் போலிருக்கிற ஒருவனோடு இருப்பாள். தூரத்தில் நின்று நாம் புழுங்குவோம். நம்மால் செய்ய இயல்வதெல்லாம் முடிந்தவரை அவளை நெருங்கிச் செல்வது. எல்லாவற்றையும் தாண்டி நாம் எழுத்தாளராக இருக்க விரும்புகிறோம்.

– நாகபிரகாஷ்
13-ஏப்ரல்-2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s