இராவணன் பேரன்

இராவணன் பேரன் தானே என்று அவர் கேட்டார். ஆமாம் என்றேன். கூட இருந்த நண்பர் இன்னொரு முறை அதை சொல்லிப் பார்த்தார். என்ன கம்பீரமான உணர்வை தருகிறது என்றார். அந்த பெயர் மட்டும் அல்ல, ஆளும் கம்பீரம் தான் என்று நண்பருக்கு சொன்னேன். பேரன் தானே என்று கேட்டவர், தாத்தாவின் தலைமுறையை சேர்ந்தவர். என் தாத்தாவை அறிந்தவர். எனவே அவர் விசாரித்த முறை அப்படி. கர்ஜீக்கிற குரலும், உறுதியான உடலும் உடையவர் தாத்தா. அறுபத்தி எட்டு வயதிலும் முழுநேர வேலைக்கு சென்ற, மேலும் செல்ல விரும்பிய மனிதர்.

என் தாத்தாவிடம் எப்போதாவது திட்டு வாங்கியிருக்கிறேன். ஆனால், எதுவுமே நினைவில் நிற்கவில்லை. ஓரே முறை மட்டும் முதுகில் அடிவாங்கியது நினைவில் இருக்கிறது. ஐவிரல் பதிந்த அச்சு ஒரு வாரம் மறையவில்லை. என் சிறுவயது முதல் பெரும்பாலும் என்னுடைய பாட்டி வீட்டில்தான் நான் வளர்ந்தது. எனவே எங்களுக்குள் இயல்பாகவே ஒரு நட்பு இருந்தது. வீட்டில் கடைகளுக்கு போக பேரன் ஓடிப்போய் ஓடிவருவான், ஆனால் அவனுக்கு பீடி வாங்கப்போக விருப்பம் இல்லை. நான்காவது, அல்லது ஐந்தாவது படிக்கும் போது வாங்குவதெல்லாம் வாங்கிவிட்டு பீடி மட்டும் வாங்காமல் வருவேன். சொல்லியும் இரண்டொரு முறை மாட்டேன் என்று நேரடியாகவே சொன்னேன். அதன் பிறகு அவர், என்னிடம் மட்டுமல்ல எவரிடமும் வாங்கச் சொல்வதில்லை. எத்தனையோ வருடங்கள்.

இந்த வருடம் எழுபத்தி ஒன்று. ஆனாலும், நல்ல உணவை அவர் விட்டுக் கொடுப்பவரில்லை. அதிலும், காரம். வீட்டில் தினமும் போரே நடந்து கொண்டிருந்தது. என் தாத்தா பேசுவதை நாசூக்காக எழுதுவது சிரமம் (சமீபத்தில் ஜெயகாந்தன் ஆவணப்படம் பார்த்தபோது தாத்தாவை போல அவர் நடந்து கொள்வதாக உணர்ந்தேன்). அவ்வாவை தாண்டி நான் அவருக்கு எதுவும் (அவ்வப்போது பீடிக்கு பணம் தருவதை தவிர்த்து) வாங்கிக் கொடுத்துவிட முடியாது. போன முறை கொச்சியில் இருந்து வந்த போது, பேரிச்சம்பழ ஊறுகாய் வாங்கிக் கொடுத்திருந்தேன். அவரால் முன்பு போல சாப்பிட முடியவில்லை என்றார். நடமாடுவதையும் குறைத்துக் கொண்டிருந்தார்.

ஐடிஐயில் படித்தவர் தாத்தா. ஆனால், பீரோ தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக டீவிஎஸ்ஸில் இருந்த வேலையை விட்டுவிட்டார். அதன் தோல்விக்கு பிறகு நண்பர்கள் கலைந்து போயிருந்தார்கள். அவருக்கு அதன் பிறகும் நிறைய சரிவுகள் இருந்தது. மூன்று பெண்களும், ஒரு பையனும். இரண்டாவது பெண்ணின் மூத்த மகன் நான். தாத்தாவுக்கு சகோதரர்கள் மூவரும், சகோதரி ஒருவரும் உண்டு (சிறுவயதில் இறந்த சிலர் தவிர்த்து). ஆறு பேரன்கள் தவிர்த்து, அந்த வகையில் பேரன் பேத்திகள் பதினைந்து பேருக்கும் மேல். அத்தனை பேருக்கும் முன்பாக அவர் பொறுப்பாகத்தான் வாழ்ந்தார். அவரோடு வருடங்களாக வளர்ந்தவன் என்கிற முறையில் மட்டுமல்லாமல், இயல்பாகவே அவரை அதிகம் தெரிந்தவன் நான்தான். 

அவரோடான என் தனிப்பட்ட தருணங்களில் ஒன்றைக்கூட இங்கே எழுத முடியவில்லை. அத்தனையும் எனக்கே எனக்கானவையாக இருக்கிறது.

ஏனோ எனக்கு மரணச் செய்திகள் இரவில் தான் தெரிய வருகின்றது. வேலை முடிந்து அறைக்கு வந்து உண்டு, விழுந்து சரியாக உறங்கப் போகும் போது. ஏனோ மூன்று கலைஞர்களின் மரணம் என்னை தனிப்பட்ட முறையில் பாதித்தது. ஜெயகாந்தன், எம்.எஸ்.வி மற்றும் சமீபத்தில் அசோகமித்திரன். அப்போதும் சரி, குடும்பத்தில் நிகழ்ந்த இந்த இரண்டாவது மரணமும் சரி. அப்படித்தான். 

இப்போது இருபத்தெட்டு தினங்கள் ஆகிறது. இன்னமும் என்னால் சகஜமாக மாற முடியவில்லை. எந்த வேலையையும் செய்யவில்லை. முக்கியமாக, படிக்கவே முடியவில்லை. ஆனால், இதை மாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்தபடி இருந்தேன். மூர்க்கமாக என்னை நிகழ்வுகளுக்கும், பொதுவிடங்களுக்கும் கொண்டு சென்று சகஜமாக இருக்க முயன்றபடி இருந்தேன். இன்று வரை எவ்வளவோ முக்கியமான விஷயங்களும் நடந்திருக்கிறது. ஒவ்வொன்றும் எழுதியாக வேண்டிய நிகழ்வுகள். ஆனால் ஓரெழுத்தும் முன் நகரவில்லை. இதை எழுதாமல் நகரவும் முடியாது.

‘சாரு, ஏனு மாடீ’ என்று ஒரு குரல் இனி தொலைபேசியில் கேட்காது. மேலும் என் புத்தகங்களை எடுத்து வாசிக்கிற கடைசி மனிதர் இனிமேல் இல்லை. அவர் கரம் படாத புத்தகங்கள் வந்து குவிந்திருக்கின்றது. இனி நான் என்ன செய்தபடி இருப்பேன் என்று அவருக்கு தெரியும்.

– நாகபிரகாஷ்
15-மே-2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s