சிதம்பர நினைவுகள்

ஒரு நடை கிளம்பினேன். அறைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. எப்போதும் இரைச்சலாக இருக்கும். பெரும்பாலும் என் குரல். அறைக்கு நால்வர் என இருபது பேர் இருக்கிற தங்குமிடம் அது. ஒவ்வொருவராக கிளம்பிப் போயிருந்தார்கள். சிரமமாக இருந்தது தனிமையில் இருப்பதற்கு. ஓணக்காலம் தொடங்கும் முன்பே விடுமுறை விடுவது எர்ணாகுளத்தில் வழக்கம். இந்த நகரத்தில் பெரும்பாலானவர்கள் கல்விக்கும், வேலைக்கும் வந்திருப்பவர்கள். குடும்பத்தோடு இங்கே இருக்கிறவர்களும் ஓணத்தை கொண்டாட தறவாட்டுக்கு போவதே வழக்கம்.

ஓரே தமிழ்க் குரல்களாக கேட்டது நான் வசிக்கிற பாலாரிவட்டம் ஜங்ஷன் முழுவதும். சாமந்தியும், மல்லிகையும் மேலும் பூக்கோலத்திற்காக சிவப்பும் மென் நிறங்களிலுமாக பூக்கள் வந்து குவிந்திருந்தது. எங்கும் மணம். முதல்நாள் மாலை பேருந்தில் வந்திறங்கியபோது மழை இருந்தது. எப்போதும் மழையிலும் இருக்கிற கூட்ட நெரிசல் இருக்கவில்லை. பெரும்பாலான கடைகளும், கல்லூரிகளும் விடுமுறையை அன்றே தொடங்கியிருப்பது தெரிந்தது. திருவோணத்துக்கு ஆறு தினங்கள் இருந்தது. மேலும், பாலாரிவட்டத்தில் அத்தனை கடைகள் முளைத்திருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

எல்லா கடையும் மழையை சமாளிக்கிற முன்னெச்சரிக்கையோடு உண்டாகியிருந்தது.பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடைக்குள் முழுவதும் மலர் மூட்டைகள். சில கட்டைகள் மீதோ, சிறிய மரப்பெட்டிகள் மீதோ வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகளும்கூட கவிழ்த்து வைத்த பழப்பெட்டிகளின் மீது சாக்குவிரித்து மலர்கள் அடுக்கி வைத்தவை. தேனி, கம்பம் பகுதிகளில் இருந்தும் சரிபாதி மத்திய தமிழகத்தின் பகுதிகளில் இருந்தும் வந்து கடை வைத்திருந்தார்கள். இடையிடையே சில மலையாளிகளின் கடைகள். பாலாரிவட்டம் ஒரு முக்கியமான குடியிருப்பு பகுதி, மற்றும் தொழிற்பகுதிகளை இணைக்கிற புள்ளியும் கூட. எனவே கடைகள் இங்கேயே இருந்தன.

20170610_163331

இன்றைக்கு கொஞ்ச நேரம் கடைகளை பார்த்துவிட்டு கலூர் போகிற வழியில் நடக்கத் தொடங்கினேன். போகப்போக, வெறிச்சோடிய சாலைகள். கிளைச்சாலைகளின் உள்ளொடுங்கிய வீடுகளில் இருப்பவர்கள் எல்லோரும் கதவை சாத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டோ, அலங்கரிக்க தோது பார்த்துக் கொண்டோ இருந்தார்கள்.

என்னை ஓணத்துக்கு வாடா என்று சொல்லியிருந்த அனந்து, அவனின் gf’களில் ஒருத்தி வெறொரு திட்டம் சொல்லியிருக்கிறாள் என்று என்னை கழட்டி விட்டிருந்தான். எப்படி இருந்தாலும் நானே நாளை கிளம்பி விடலாம் என்று முடிவு செய்திருந்தேன். அலுவலகத்தில் ஓணக் கொண்டாட்டம் முன்னாலேயே நடத்திவிட்டு, சத்தயவோடு (எடா நோக்கு! சந்தியா அல்ல கண்டோ?) கொஞ்சம் விளையாட்டுகளும் சொல்லியிருந்தார்கள். இப்படி கொண்டாட்டங்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்வது எனக்கு மிகப்பெரிய சித்ரவதை. அங்கே நான் தனியாகத்தான் இருப்பேன். எனக்கென ஒரு வீடற்றவனாக. தனிமையில் நாதியற்றவனாக.

அதே எர்ணாகுளத்தின் தெருக்களில்தான் ஒரு திருவோணத்தன்று, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பசியோடு நீர் குடித்து குடலை நிறப்பியபடி அலைந்திருக்கிறார். அவருக்கு அப்போது என் வயதுதான் இருந்திருக்கும். ஒரு பிச்சைக்காரனாக கருதப்பட்டு அவருக்கு வீட்டுக்குப் பின்னால் சத்யத்திற்காக இலை போடப்படுகிறது. உண்டபடி இருக்குப்போது ஒரு பெண்ணால் அடையாளம் காணப்படுகிறார். ஆமாம், என்று சொல்கிறார். அவர் எழுந்து வெளியே வரும்போது குடும்பமே நின்று அவரை பார்க்கிறது. இந்த நகரத்தில் தான் அவர் எத்தனையோ வருடங்கள் இளமையில் அல்லல்பட்டு, வாழ்கையை சொந்தமாக எதிர்கொண்டும் இயலாமையோடும் கழித்து தன்னுடைய வாழ்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

சிதம்பர நினைவுகள் வாசித்து முடித்தபோது அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவர் பணியில் இருந்த அலுவலகத்தின் முன்னால் இறங்கிதான் நான் என் அலுவலகம் செல்ல பேருந்து ஏறுவது. ஆனால், அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இந்த கேரளம் படைப்பாளிகளை எங்கோ உச்சியில் தூக்கிதான் பெரும்பாலும் வைத்திருக்கிறது. நாம் அண்ணாந்து பார்க்கும்படி. அவரைப்பற்றி இணையத்தில் கொஞ்சம் தேடிவிட்டு அப்படித்தான் நினைத்தேன். அந்த புத்தகத்தில் அத்தனை நெருக்கமாக நின்று பார்த்த மனிதரை அல்ல, வெறொருவரையே நான் சென்றால் பார்க்க நேரும் என்று தெரிந்தது.

மேலே சொன்ன சம்பவத்தை கொண்ட கட்டுரைபோல, இருபத்தியோரு கட்டுரைகள். சிதம்பரம் கோயிலில் தொடங்கி ஸ்வீடிஷ் அகாடமியில் வரையில் அவருடைய வாழ்கையின் பயணம். தன் சரிவுகளையும், சபலங்களையும்கூட அப்பட்டமாக எழுதிவிட்டிருக்கிறார். தவிக்கிற மனம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். அத்தனையும் அவருக்காக தாங்கிக் கொள்கிற அவருடைய மனைவி! அவருக்காக கூட இருந்த நண்பர்கள். அவர் பயந்து விலகிவந்த மனிதர்கள். அவர்களின் சரிவுகள். தன்னுடைய வாழ்கையின் மையப்புள்ளிகள் அத்தனையையும் சொல்லிவிடுகிற எத்தனிப்பை கொண்ட படைப்பு.

பொதுவாக ஒரு நிலத்தை அறிந்து வாசிப்பதால் வாசிப்பு அனுபவம் கூடும் என்று நினைத்திருந்தேன். அது உண்மைதான். ஆனால், இந்த படைப்பை பொறுத்தவரை அதனுடைய காலமும் தற்கால எர்ணாகுளத்தின் மாற்றமும் ஏனோ அதனோடு என்னை முரண்படச் செய்தபடி இருந்தது.

இந்த புத்தகம் பற்றி நிறையவே விரிவாக எழுதப்பட்டிருப்பதால் இதை தனிப்பட்ட அனுபவப் பதிவாகவே முடித்துக் கொள்கிறேன்.

ஒரே அமர்வில் வாசிக்க முடியாத உக்கிரத்தையும், மறுமுறையும் வாசிக்கவேண்டியதாக உண்மையை பேசுவதாலும் இருக்கிற ஒரு புத்தகம். ஆமாம், மறுவாசிப்பில் இருக்கிறேன் இப்போது.

– நாகபிரகாஷ்
10-ஜூன்-2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s