இருபத்திமூன்று கதைகளோடு அலைவுறுதல் – வெண்ணிலை

ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பயந்திருக்கிறீர்களா? ஒர் எழுதச்சவாலான படைப்பை நீங்கள் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவராக இருந்து படிக்க நேரும்போது? என் கதைகளுக்கான முதல் வாங்கியங்களை எழுதிச் சேர்த்துக் கொண்டிருக்கிற ஒருவனாக ஒவ்வொரு நல்ல படைப்பையும் அச்சத்தோடே வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு சிறுகதைக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து வெகுதூரம் ஓடத்தோன்றுகிறது. வெண்ணிலை (சு.வேணுகோபால்) தொகுப்பும் அப்படியான ஒன்று. வாசித்து முடித்து எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ளவும் நிறைய நேரம் வேண்டியிருந்தது.

21291212_909544679184050_275022749_n

இருபத்திமூன்று கதைகளையும் வாசித்து முடிக்கிறவரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மனிதர்கள் என்னோடு வந்தபடி இருந்தார்கள். ‘கிழவி இருக்கிற வரைக்கும்’ என்கிற குதிரை மசால் தாத்தாவை எனக்குத் தெரியும். அவரோடு அழிஞ்சி குச்சி வெட்டப்போன அனுபவம் எனக்கு இருக்கிறது. வெண்ணிலையிலும், சந்தர்ப்பத்திலும் வருகிற பையன்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு அரும்புதலும் கொண்டாடுகிற இயற்கையை வெல்வதற்கான நம்பிக்கையாகக் கொள்கிற மக்கள். சாதி சார்ந்த, பகல் கனவுகள் மற்றும் பிம்பங்களைக் கொண்டு அரசியலில் கரைந்து கொண்டிருக்கிற வாழ்க்கை. பெண்களே எல்லாமுமாக இருக்கிற நிலம் சார்ந்த வாழ்க்கையில் ஆளும் பெண்கள். கைவிடப்பட்டுத் தனித்து உட்கார்ந்திருக்கிற கிழவிகள். அவதியுறும் சிறுபெண்கள். கனவு கொண்டிருக்கிற குழந்தைகள். பேதைமை மாறாமலிருக்கிற ஆண்கள், பெண்கள். எவருமே பாத்திரங்கள் அல்ல மனிதர்கள்.

உள்ளிருந்து உடற்றும் பசி, பேரிளம் பெண் மற்றும் கொடிகொம்பு போன்ற சிக்கலான அளவில் காமத்தைக் கையாளும் கதைகள் மட்டுமில்லாமல் கூறு கெட்டவன், பேதை, மற்றும் வாழும் கலை ஆகிய கதைகளிலும் அதை உறவுகளுக்குள்ளான விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் விதமாகக் காணலாம். வேளாண்மை சார்ந்த மற்றும் தன்னியல்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ள வாழ்கையில் காமத்தை அணுகும் விதம் பற்றிய புரிதலுடன் இந்தக் கதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. முதலில் வயிற்றுப் புருசன் கதையிலிருந்து தொடங்குவதன் மூலம், நேரடியாக அப்படியான வாழ்கையைப் புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு ஒரு பிடி கிடைக்கலாம்.

சொல்லப்படுவது போல இதிலுள்ள கதைகள் விவசாயம் சார்ந்திருக்கிற வாழ்வின் பிரச்சனைகளை மட்டுமே பேசவில்லை. வெவ்வேறு விதமான மனிதர்களையும், சூழல்களையும் கொண்டிருக்கிற படைப்புகள் உள்ள தொகுப்பு. நிரூபணம் மற்றும் மெய்ப்பொருள் காண்பது அறிவு ஆகியவற்றை வாசிக்கும்போது முதலாவது ஆண்டவன் குழந்தைகளோடு வாழ்கிறார் என்பதை விவரித்துக் காட்டுவதில் டால்ஸ்டாயின் தன்மையும் பின்னது ஒரு குடும்பத்தின் ஏழ்மையையும், இயலாமையையும் நேரடியாகச் சித்தரித்து ஓர் உடைப்புக்கு நகர்த்துவதன் மூலம் செகாவின் தன்மையும் கொண்டதாகப்பட்டது. சாயல் கொண்ட படைப்புகளாக இவை இரண்டை மட்டுமே அடையாளம் காட்டவியலும்.

அவதாரம், புத்துயிர்ப்பு மற்றும் தொப்புள் கொடி ஆகிய கதைகளில் சு.வேணுகோபால் பிறப்பைத் தீவிரமாகக் கையாளுகிற விதம் அவருக்கே உரியதான ஒன்றாக இருக்கிறது. அவதாரம் கதையில் நம்முடைய நாகரீகம் எப்படியான மன அமைப்புக்கும், குரூரத்துக்கும் பிறப்பு சார்ந்தே தள்ளியிருக்கிறது என்பதைக் காடர் பழங்குடியினரின் கொண்டாட்டக் காட்சி ஒன்றின் மூலமாக உணர்த்திவிடுகிறார். அதனுடைய தாக்கத்திற்குச் சற்றும் குறைவில்லாதவை மற்ற இரண்டு கதைகளும். புத்துயிர்ப்பில் அதை எவற்றையும் தாண்டி நீடு வாழும் மனித இயல்பின் ஊக்கியாக விவரித்துக் காட்டுகிறார். தீவனத் தட்டுப்பாட்டையும், பஞ்சம் போன்ற நிலையில் தவிக்கும் பசு வளர்ப்போன் ஒருவனை மையப்பாத்திரமாகக் கொண்டு நகரும் அந்தக் கதையில் உண்டாகிற அதே தவிப்பை தொப்புள் கொடியிலும் முதல் சில பக்கங்களுக்குப் பிறகு உணரத் தொடங்குவோம். அதன் வர்ணனைகள் இயல்பிலிருந்து பிறழ்வுகளுக்கு நகர்ந்து செல்லும்போது தொடங்கி, இறுதியில் ஒரு கணத்துக்குக் கடந்த காலத்தின் நினைவை சொல்வதன் மூலமாக அதன் தாக்கத்தை அதிகரிக்கிறது.

இளைஞர்களின் இயல்பை, குறிப்பாகத் தற்கால இளைஞர்களின் இயல்பை அவர் கதைகளில் கையாளும் விதத்தையும் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தொகுப்பின் பெயரில் அமைந்த வெண்ணிலை கதையிலும், சந்தர்ப்பம் போன்ற கதைகளிலும் அதைக் காணலாம். வெண்ணிலையில் திரைப்படம் சார்ந்த உரையாடல்கள் காலவதியாகி இருப்பதால், அல்லது அப்படியான உரையாடல்கள் எனக்கு அந்நியமானதால் சிறிய அளவில் வாசிப்புக்கு அதுவே இடைஞ்சலாகி விடுகிறது. ஆனால், அப்படியான உரையாடலே இயல்பானது என்பது கதையின் சிக்கல். அதே அந்நியத் தன்மை எனக்குச் சந்தர்ப்பத்தில் வருகிற பையன்களாலும் அவர்களின் செயல்களாலும் உண்டானது. அது என்னுடைய பிரச்சனை தான் என்பது தெளிவாகவே தெரிகிறது. என்ன செய்ய 😦 . ஆனால் புற்றுக் கதையில் வருகிற குழந்தைகளோடு இயல்பாக ஒன்றிப்போக முடிந்தது. புற்றைப் போன்றே ஒற்றை வரியில் சுருக்க இயலாத கதைகள் தொகுப்பில் இருப்பவை.

மேலும் ஒவ்வொரு கதையையும் தனித்தனியே குறிப்பிட வேண்டிய தேவை இருக்கிறது. அந்தந்த வட்டாரத்துக்கு உரிய மொழி அதன் வேறுபாடுகளோடு, அதன் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீவிரமாக அதற்கே உரிய கதாபாத்திரங்களின் மூலம் அதற்கான இயல்புகளோடு வெளிப்படுத்துதல் பலமாக அமைந்த கதைகள். எந்த இடத்திலும் கதையிலிருந்து நாம் விலகி அதன் வெளிப்பாட்டு முறையில் கவனம் செலுத்துவதில்லை, தேவையோடு கவனித்தால் அன்றி. ஆனால், தொகுப்பு வேண்டுகிற கவனமான வாசிப்பும் உழைப்பும் இடையில் நின்றிருக்கிறது. கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது.

– நாகபிரகாஷ்
31-ஆகஸ்ட்-2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s