என் வீடு – சிறுகதை

என் வீடு எங்கே இருக்கிறது? உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்த கதையை ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். ஒன்றின் ஆரம்பம் எப்போதுமே மற்றொன்றின் முடிவில் இருந்துதான் தொடங்குகிறதாம். ஒரு நாள் ரயில் நிலையத்தில் அம்மாவின் மடியில் இருந்து ஏதொவொரு துர்க்கனவின் காரணமாக விழித்து எழுந்தபோது அவள் சொல்லித் தூங்கவைத்த கதையில் இந்த கதை பொருந்திப்போகும்.

அப்போது நாங்கள் குடியிருந்தது லைன் வீடு. ஓடுகள் கருத்துப் போய்ச் சில விரிசல்களும் கொண்டிருந்தது. மழை நாட்களில் நாங்கள் நான்கு தெரு தள்ளிப்போய் நீர் பிடிக்கும் கஷ்டமில்லாமல் செய்ய, ஆங்காங்கே பாத்திரம் வைத்துப் பிடிக்கும் வகையில் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்குச் சென்ற நண்பனிடம் நான் ஸ்வெட்டர் கேட்டபோது அவன் சிரித்தான். ’இந்தூருல அடிக்கற வெயிலுக்கு எதுக்குடா உனக்கு ஸ்வெட்டரு?’ அந்த நாட்களின் குளிர் இப்போதும் என்னை சுருண்டுகொள்ளச் செய்யும். அவனுக்கு அது புரியாதில்லையா? நான் இப்போதும் குளிர் தாக்கும் போதெல்லாம் சுருண்டு கொண்டு அம்மா அவளுடைய பாலியஸ்டர் சேலையில் ஒன்றை எடுத்து வந்து தருவதை நினைவுக்கு கொண்டு வருவேன். அந்த சேலையால் தடுக்க முடியாத குளிரை நான் இப்போது நேசிக்கிறேன்.

அதன் நினைவாக ஒரு ஸ்வெட்டர் வாங்கிவைப்பதில் என்ன தவறு இருந்துவிடும். வீட்டுக்கு வாடகை சரியாக தர முடியவில்லை. அப்பாவுக்கு வேலை இல்லை. அவரின் சம்பாத்யத்தை பற்றி பேசி நான் வேறு எங்கோ போகவேண்டாம் என்று நினைக்கிறேன். அவரால் அந்த கடமையை சரியாக செய்ய முடிவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அம்மா துணி தைப்பதில் இருந்து எல்லாமே செய்தாள். தையல் மெஷினை அப்பா விற்காதவரைக்கும் அதை வைத்து என் படிப்பு செலவையும் சேர்த்து அவளால் பார்த்துக்கொள்ள முடிந்தது. இந்த ஊசிகளின் முறிவைப் பற்றி கவலை கொள்ளும், வகைமையில் அடங்காத சிறுவனாக என் பால்யம் கழிந்தது.

அதன் பிறகு அம்மா தகடு அடிக்கும் வேலையை செய்தாள். உங்களுக்கு நேர்த்திக்கடன் இருக்கும் இல்லையா? நீங்கள் பெரிய ஆட்களாக இல்லாத பட்சத்தில், பெருந்தெய்வங்களோடு உங்களுக்கு முறைப்பட்ட கொடுக்கல் வாங்கல் இல்லாத பட்சத்தில், மாரியாயி கோயிலுக்கு நீங்கள் வருவது இயல்பாக இருக்கும். கொட்டாவி விடும்போதுகூட உங்கள் பாட்டிகள் சில சமயம் அவளை வந்து போகச்சொல்வார்கள். எனக்கு கண்ணில் வேனிர் கட்டி வந்து வீங்கி பார்வைத்திறன் குறைந்தபோது என் பாட்டிதான் இது சரியானவுடன் கண்மலர் வாங்கி உண்டியலில் போடுவதாக வேண்டினாள். அச்சில் தகட்டை வைத்து அப்படியான உருக்களை அடித்து இறக்குவதுதான் என் அம்மா பின்னாளில் செய்தது.

இரண்டு சாக்குத்துணிகளை தரையில் ஒன்றின்மேல் ஒன்றாக விரித்து, அதன் மேல் மரக்கட்டை ஒன்றை தளமாக வைக்கவேண்டும். அதில் தகட்டை வைத்து அச்சுகளைப் பொருத்தி சுத்தியால் அடித்து இறக்கவேண்டும். தகடு வெட்டும் பணியெல்லாம் தனியாக முடித்தே வரும். அதனால், ரத்த காயங்கள் ஒன்றும் இருக்காது. ஆனால், காப்பு காய்ப்பதை தடுக்க முடியாது. அம்மாவின் கைகள் அந்த தடிப்புகளோடு மஞ்சள் பூசியிருக்கும். அப்போதும் என் புத்தகப்பையை தூக்கி வருவதை அவள் நிறுத்தவில்லை. என் உதவிக்கான பிரயத்தனங்களின் போதெல்லாம் அவள் அழுவாள். அந்த அழுகையை எப்படி நிறுத்துவது என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை. நான் பகுதிநேர வேலைக்கு சேர்ந்தபோதும் அழுதபடியேதான் அனுப்பி வைத்தாள்.

வீட்டு வாடகை பாக்கி இரண்டு மாதங்களாக அதிகரித்தபோது நான் அடம்பிடித்து அந்த வேலையில் சேர்ந்தேன். தாயத்து செய்வதுதான் வேலை. தகடு வெட்டி உருட்டுவது பெரியாட்கள் செய்வார்கள். குப்பி எங்கோ ஓரிடத்தில் தட்டி வாங்கி வரப்படும். அதை தகட்டு உருளையின் இரு பக்கங்களிலும் மாட்டவேண்டும். உருகும் வகையிலான பொடித்தகடு வெட்டித்தருவார்கள். ஊதுவதற்கு வாகாக வெங்காரத்தில் முக்கிய பின்னர் அந்த உருளையின் இடைவெளியில் தகட்டை நுழைத்து, மறுபடி வெங்காரத்தில் முக்கி வரிசையாக அது உருண்டுவிடாமல் அதற்கான பலகைகளில் அடுக்கவேண்டும்.

கைகளில் சிறு காயம் இருந்தாலும் வெங்காரம் பட்டால் எரியும். பிசிறுதட்டும்படி வெட்டி எறியப்பட்ட அந்த பொடித் தகடுகளால் காயம் ஏற்படாதென்றால் மட்டுமே அதிசயம். வேலைக்கு சேர்ந்த இடத்தில் பணம் கடன் கொடுக்க தயாராக இருந்தார்கள். பண விஷயம் என்பதால் அப்பா உள்ளே வந்தார். எல்லாம் சரியானது என்று நினைத்தோம். சில மாதங்களில் எங்களை வீட்டைவிட்டு வெளியே தள்ளிப் பூட்டு போட்டார்கள். எங்கள் பொருட்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், அணிவதற்கான ஆடைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டது.

வாடகை பாக்கி முழுமையாகக் கொடுக்கவில்லையாம். அன்றைக்கு நாங்கள் எங்கெங்கோ பயணப்பட்டோம். உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. ஆண்டவன் இருக்கிறான் என்று அப்பா சொன்னார். ஒரு கோயிலில் உட்கார்ந்திருந்தோம். சாப்பிடவும் அந்த ஆண்டவன் கொடுத்தான். ஆனால், இருட்டத்தொடங்கவும் என்ன செய்வது என்கிற பயம் வந்துவிட்டது. கடைசியில் ரயில் நிலையம் போய் உட்கார்ந்துகொள்ள முடிவு செய்தோம். அன்றைக்கு தான் நான் முதன்முதலில் தெரிந்து கொண்டேன், ரயில் நிலையங்களுக்கு வழியனுப்ப வருகிறவர்களும் அதற்கென பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கவேண்டும் என்று. என் பாடத்தில் அதைப்பற்றி எதுவம் குறிப்பு காணோம்.

நான் நாளைக்கு எப்படி பள்ளிக்கு செல்வேன் என்று பயம் வந்தது. அணிந்தருந்த ஆடை அழுக்காகிவிட்டது. இத்தோடு நாளைக்கு பள்ளிக்கு போனால் நண்பர்கள் சிரிப்பார்கள். ரயில் நிலையத்தில் நான் நடுநிசியில் விழித்து எழுந்ததற்கு துர்க்கனவுதான் காரணம். அத்தோடு பக்கத்தில் என் அப்பாவை காவலர்கள் விசாரிப்பதும். நாங்கள் பிளாட்பார டிக்கெட்டும் எடுக்காமல், இன்னமும் ரயில் டிக்கெட்டும் எடுக்காமல் இவ்வளவு நேரம் கழிப்பது ஏன் என்று கேட்டார்கள். அப்பா பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் காலை ரயிலில் சென்னை கிளம்புவதாகவும், இதற்கு மேல்தான் டிக்கெட் எடுக்கப்போவதாகவும் சொன்ன அப்பா பிளாட்பார டிக்கெட் பற்றி எங்களுக்கு தெரியாது என்று பொய் சொன்னார். பின்னர், அவர்களின் கண் முன்னாலேயே இருந்த சில்லரையை பொறுக்கி ஒரு பிளாட்பார டிக்கெட் எடுத்தார்.

விடியும் பொழுதில் இருந்த ஒரு ரயிலில் ஏறி நாங்கள் சென்னையை சென்று சேர்ந்தோம். பரிசோதகர்கள் அத்தனை பேரையும் சோதனையிட முடியுமா என்ன? ஏதோ நம்பிக்கை மிச்சமிருந்தது. ஆனால், அதுவும் எங்களை நோக்கி குற்றவாளிகள் என்று கூவியது. ஒரு தனிமனித கருணையால் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். ஆனாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சென்னையில் ஒரு அரசியல்வாதியை பார்க்க அப்பா கூட்டிப்போனார். எம்.எல்.ஏ. எங்கள் ஊர்க்காரர்.

எத்தனை பேருப்பா இப்படி கிளம்பி வருவீங்க? இங்க பொழைக்க வர்றது சரி. அதுக்கு அடிப்படையா என்ன வேணுமின்னு யோசிக்கனுமில்லை? இப்போ இப்படி வந்து நிக்கறப்போ என்னால என்ன பண்ணமுடியும். நம்ம ஊரிலயே வேலை கிடைக்கறதுக்கு அத்தனை சிரமம் இருக்கறப்ப இங்க எப்படி ஈசியா வேலை கிடைக்கும்னு நீ நெனச்ச? நீ எங்கையாவது மூலைல கெடந்து பொழச்சுப்ப, உன் பொண்டாட்டியையும் பையனையும் எங்க தங்கவைப்ப? இந்தா இதில ரெண்டாயிரம் பணம் இருக்கு. ஒழுங்க ஊருக்கு போய் குடும்பத்தை காப்பாத்தற வழியைப்பாரு. இங்கெல்லாம் இந்த பணத்தை வைச்சு ஒன்னும் புடுங்க முடியாது. ஒருத்தர்கிட்ட பேசி உனக்கு தற்காலிகமா ஒரு வேலை ஏற்பாடு பண்ணி தரச்சொல்றேன். கெளம்பு.

~~~-~~~

அன்றைக்கே ஊருக்கு திரும்பினோம். அப்போதைக்கு ஒரு வேலை அப்பாவுக்கு கிடைத்துவிட்ட காரணத்தால், பிரச்சனைகளை சமாளிக்க வழி கிடைத்திருந்தது. ஒரு வீட்டையும் அங்கிருந்தபடி ஏற்பாடு செய்துவிட்டுதான் நாங்கள் வந்துசேர்ந்தோம். எங்கள் நகரத்தின் இன்னொரு மூலையில் அது இருந்தது. வீட்டு ஓனரிடம் அப்பா ஏற்றுக் கொள்ளும்படி காரணங்களைச் சொன்னார். கூட்டுக் குடும்பத்து பிரச்சனையால் சமான்கள் எடுக்கமுடியாமல் போனது என்றார். இப்போதைக்கு கையில் உள்ள பணத்தால் அவசியமான பொருட்களை வாங்கியபின், ஒரு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக தரமுடியும் எற்றபோது தயக்கத்துடன் ஒரு அவகாசம் கொடுத்து வீட்டை கொடுத்தார்கள்.

எப்படியோ அப்பாவை தேடி இரண்டு பேர் அடுத்த நாளே வந்தார்கள். அவர்களோடு அப்பா வேறு வழியற்று என்னை அனுப்பிவைத்தார். அவர்கள் இரண்டு தேர்வுகளை முன்வைத்தார்கள். என் பேரில் வாங்கிய பணத்தை இப்போதே திருப்பிக் கொடுப்பது, இல்லையேல் என்னை முழுநேர வேலைக்கு அனுப்புவது. சாத்தியமான விஷயம் இரண்டாவது மட்டுமே. இதைப்பற்றிய விவாதங்கள் எதுவும் புரியாத பாமரர்கள் நாங்கள். அன்றைக்கு நான் வேலை செய்த பட்டறைக்கு வெகுதொலைவு பயணப்பட்ட பிறகு தினமும் வீடு திரும்புதல் சாத்தியமற்றுப்போனது. எனக்கான வாழிடம் அந்த பட்டறை என்றானது.

என்னுடைய வேலையானது அதன் அவசியத்தை இழந்தபடி இருந்தது. ஆனால், போட்டி அதிகம். வேலையாட்கள் கிடைக்காமல் போவதால், இன்னும் நெருக்கப்பட்டன பட்டறைகள். இன்னும் யார் தாயத்துகளை நம்பியிருக்கிறார்கள்? அங்கிருந்தவர்கள் நம்பிக்கையின்மையோடு நம்பிக்கையைச் சார்ந்திருந்தார்கள். நாங்கள் மனித சாத்தியத்தின் எல்லைவரை வேலை செய்தோம். நாட்கள் வாரங்களாக மட்டுமே வகுக்கப்பட்ட எளிய மனிதர்களில் ஒருவனானேன். அந்த வாரங்களின் முடிவில் வீட்டுக்கு போவதே என்னுடைய லட்சியமாக மாறியது. அதற்காகவே வேலை செய்கிறோம் என்று நம்பத்தொடங்கினேன். உண்மை அதுவாகக்கூட இருக்கலாம்.

இப்போதெல்லாம் வீட்டில் என்னால் நிலைபெறவே முடிவதில்லை. பையில் அடுக்கிய துணியை எடுத்து வெளியேகூட வைக்காமல், தற்காலிகத்தின் அடையாளமாக அதில் வைத்தே உபயோகிக்கிறேன். அதே வீட்டில் இல்லை. அப்பா இரண்டு வருடத்திலேயே நான்கு வீடுகள் மாற்றியிருந்தார். ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போதும் அதே வீடு வேறு விதத்தில் தெரியும். எங்குமே என்னை முழுமையாக பொருத்திக்கொள்ள முடியவில்லை. அதே அம்மா, அதே அப்பா. இருந்தாலும் எதையோ காணவில்லை. எல்லோரும் நான் வளர்ந்துவிட்டேன் என்கிறார்கள். ஆனாலும், இன்னமும் நான் குளிருக்கு சுருண்டுகொண்டு அம்மாவின் சேலையைக்காக கை நீட்டுகிறேன். அவள் தரும் போர்வை எனக்கு தேவையில்லை. உண்மையில் அவள் இன்னும் அங்கே இருக்கிறாள், என் வீட்டில்தான் இருக்கிறாள். நான்தான் வீட்டுக்கு இன்னும் போகவில்லை.

– நாகபிரகாஷ்
கணையாழி, மார்ச் 2016

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s