இப்படியாக ஹைதராபாத் – 01

அறையிலிருந்து கிளம்பியது நல்ல வெயிலில். ஆட்டோ கிடைக்கவில்லை. ஒரு பத்து நிமிடம் மேடான சாலையில் இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு ஒன்று விலாவில் இடித்தபடி இருக்க நடந்தேன். தொடர்ந்து ஆட்டோ, பேருந்து மாறி ஆலூவா ரயில் நிலையம் சரியான நேரத்தில் சென்று இறங்கினேன். எப்படியோ ரயில் தாமதம். ஹைதராபாத் போவதற்காக வெள்ளிக் கிழமை விடுமுறை எடுத்திருந்தேன். ஆனாலும் கொஞ்சம் அலுவலக வேலைகள் முடித்த பிறகே கிளம்பி வந்திருந்தேன். அன்றைக்கு காலையிலேயே எல்லா கர்நாடகப் பயணக் கட்டுரைகளை என் வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். எனவே செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எனவே ஹைதராபாத்தை பற்றி கொஞ்சம் படிக்க முயற்சி செய்தேன்.

அடுத்ததாக ஒரு பயணம் போவதற்கு என்னிடம் திட்டம் இருக்கவில்லை. என் நண்பர்கள் அமுதன், பாரதி மற்றும் அருண் பிரகாஷ் போன்றவர்கள் (முறையே போபால், ஹைதராபாத், தில்லி) தாங்கள் இருக்கிற நகரங்களுக்கு என்னை வரச் சொல்லி அழைத்தபடி இருப்பார்கள். அப்படி கடந்த முறை சென்னையில் நாங்கள் சந்தித்த போது ஹைதராபாத் நிச்சமயாக வரச் சொல்லி பாரதி கேட்டிருந்தான். எனக்கு எல்லா இடங்களும் போவதற்கு ஆசை. ஆனால் அதற்கான தருணம் அமைந்து வருவதில்லை. மேலும் வேலை!

29063931_1018126591659191_4852405352730460295_o.jpg

எதேச்சையாக மார்ச் பத்தாம் தேதிக்கு பிறகாக ஒருநாள் வாட்சாப்பில் ‘பூனைகளை நம்மாதீர்’ என்று என்னை நானே சீண்டும் விதமாக நிலைத்தகவல் வைத்திருந்தேன் (ஒரு காரணமாக). ஒரு பொறியில் மாட்டிய எலியாக, பாரதி அதற்கு பதிலாக ‘கிளம்பிவாடா ஹைதராபாத்துக்கு’ என்று பதில் அனுப்பியிருந்தான். உடனே நான் அடுத்த வெள்ளிக் கிழமை கிளம்புவதற்கு பயணச்சீட்டு எடுத்தேன். எளிமையான திட்டம். வெள்ளிக் கிழமை மதியம் கிளம்பி சனிக்கிழமை சென்று சேர்வது. சனி, ஞாயிறு ஊர் சுற்றல். தொடர்ந்து மூன்று தினங்கள் பாரதியின் அறையில் இருந்தபடி வேலை செய்யலாம். விடுமுறை 29, 30 இருக்கவே அடுத்தது சனி, ஞாயிறு மீண்டும் என்பதால் நான்கு நாட்கள். அதையும் பயன்படுத்திக் கொள்வேன். பெரியதான செலவும், சிக்கலும் தவிர்க்கலாம் என்பது திட்டம்.

ஒன்றை மறந்திருந்தேன். என் நண்பன் நிறுவனத்தில் வேலைப்பளு ஏப்ரல் வரை அதிகம் இருக்கும். என்னை அவன் வரச் சொன்ன எல்லா தருணங்களிலும் தெளிவாகவே சொல்லியிருந்தான். ஆனால் பயணச்சீட்டு பதிகையில் எனக்கு நினைவில் இல்லை. மேலும் அவன் கிளம்பி வாடா என்று சொல்லியிருந்தான் ஆனாலும் உடனே என்று சொல்லியிருக்கவில்லை. என் அலுவலக நண்பரிடம் மூன்றாயிரம் கடன் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். இனி ஒன்றும் சிரமமில்லை ஒன்றாம் தேதி கொடுத்துவிடலாம் என்கிற தைரியம்.

இப்படியான காரணங்களால் அடிப்படை வாசிப்பை பயணம் தொடங்கிய பிறகே ஆரம்பித்தேன். மேலும் கையில் அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள். அதில் வாசித்த கதைகளும் மீண்டும் வாசித்து, தொகுப்பின் பெயர் கொண்ட கதை வரைக்கும் வாசித்ததும் தொடர முடியவில்லை. ஏனெனில் கதை சிகந்திராபாத்தில் நிகழ்வது, மேலும் நான் போய்க் கொண்டிருக்கும் பகுதியின் வரலாறு மொத்தமும் பின்புலத்தில் பின்னப் பட்டிருப்பது. வேறு வாசிப்பை தொடர்ந்து ரயிலில் விழித்திருந்த நேரம் முழுவதும் தொடர்ந்தாலும், அமியைத் தொடுவதற்கு முடியவில்லை. அலுவலகத்திலிருந்து வேறு அழைத்து மனநிலையை குலைத்தார்கள். அடுத்த தினம் மதியம் இரண்டு மணிக்கு சென்று சேர்வது வரைக்கும். பெரும்பாலும் வாசித்தது அ.முத்துலிங்கத்தின் அங்க இப்ப என்ன நேரம் தொகுப்பு. கிண்டிலில் கிடைத்தது. அவர் மதுரை திட்டத்திற்கு வழங்கிய புத்தகம்.

IMG_20180324_072509917_HDR

ஆந்திராவில் நான் கடந்த பகுதிகள் அத்தனையும் வெற்று நிலமாக வைத்திருக்காமல் விவசாயம் ஏதாவது செய்தே வருகிறார்கள். எங்கும் பசுமை. குளிர் அதிகம் காட்டாத பனி. ஆனாலும் கண்ணில் தெரியும் வறுமை. ஏன் குண்டூர் நகரப் பகுதி முழுவதும் ரயில் பாதையோரம் பார்க்க நேர்ந்த குடியிருப்புகள், மனிதர்கள் ஏன் எருமைகளும் சதைப்பற்று இல்லாது வெற்று எழும்புத் துருத்தலாக வறுமையே ஆக. வராங்கலில் குடியிருந்த தெரிந்த ஒருவரின் மூலமாக எனக்கு கிடைத்த அறிமுகம், பொதுவாக கிடைக்கும் சித்திரம் ஆந்திரத்தை விடவும் தெலங்கானா பகுதி வறுமையானது என்பது. என் கண்ணில் படும் ஆந்திரம் இப்படியானது என்றால் தெலங்கான இன்னும் எப்படி இருக்கும்? என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. போதாதற்கு விக்கீபிடியாவில் ஹைதராபாத்தின் பக்கம் சொல்கிறது 13% ஹைதராபாத் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருப்பதையும், ஆயிரத்து நானூறுக்கு மேல் சேரிப் பகுதிகள் இருக்கிறது என்றும். எதுவும் போகிற போக்கில் குறிப்பிடப்பட்டவை கிடையாது. கொஞ்சம் எதையும் படிக்காமலிருந்து அதிலிருந்து வெளியே வந்தேன்.

இங்கே வந்து சேர்ந்த பிறகு தெரிய வந்தது. ஊரிலிருந்து நான் கிளம்பிய தினம், 23 மார்ச் அசோகமித்திரனின் முதலாம் ஆண்டு நினைவு தினம். எனக்கு அதைப் பற்றி முன்கூட்டியே தெரியாது. ஹைதராபாத் வந்து சேர்ந்த பிறகு முகநூலில் பார்த்தால் தெரிந்தது. இன்னொரு விபத்தாக ஹைதராபாத் ட்ரெயில்ஸ் என்கிற அறிமுகமான சிற்றமைப்பு ஒன்று நடத்திய சார்மினார் நடை வந்த முதல் நாளே நடக்கிறது. எனவே பாரதி புகழ்பாடும் இரானி தேனீர், ஒற்றை மினார் மஸ்ஜித் அருகில் குடித்ததும் வேறு இடத்தில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு பயணித்தோம். அரை மணிக்கும் மேல் பயணம். உடனுக்குடன் தயாராகி வெளிய வந்தோம்.

IMG_20180324_223522.jpg


நேராக ஷில்பாராமம் சென்றோம். பழங்குடியினர் நடனங்கள் சில தினங்களுக்கு ஒருங்கு செய்யப் பட்டிருந்தது. குசாடி நடனம் மற்றும் கம்மம் பழங்குடியினரின் மயூரி நடனம் முழுவதும் பார்த்தோம். அவர்களின் உடையால் ஒளியமைப்பு ஏற்படுத்திய நிழலுருவங்கள் நடனத்தின் வெறொரு பரிமாணமாக அமைந்தது. இப்படியான நிகழ்வு எனக்கு முதல்முறை. அந்த நேரத்தில் ஆடப்பட்ட நடனம் தீயைச் சுற்றி ஆடப்பட வேண்டியது, இங்கு மேடையில் வெறுமனே சுற்றி வந்தபடி இருந்தார்கள். சுட்டிக் காட்டய பாரதியிடம் சொன்னேன், ஒருமுறை மணல்வீடு ஹரிகிருஷ்ணன் ஒரு நாட்டார் கலையை அதன் இடத்திலிருந்து பிடுங்கி மேடையேற்றுவதற்கு எதிராக எப்படியான வாதங்களை முன் வைத்தார் என்று. இங்கு ஒரு நடனத்துக்கு பதினைந்து நிமிடத்துக்கு மேல் தரப்படவில்லை.

IMG_20180324_181456

தொடர்ச்சியாக பரதம் இருந்தது. அனைவரும் மாணவர்கள் என்பதால் குழுக்களாக மாறியபடி இருந்தார்கள். இடையில் ஓய்வு கிடைப்பதற்காக இப்படி. இந்த நிகழ்வின் சிறப்பு அனைத்து இசைக்கருவிகளும் மேடையில் சிறப்பாக வாசிக்கப் பட்டது. குறிப்பிட்டுச் சொல்வதற்கு புல்லாங்குழல். இந்த நாட்டியம் தொடங்குவதற்கு முன்னர் மேடையின் நுழைவு வாயிலில் மாணவிகள் குழுமிய நேரம், இசைக் கருவிகள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மாணவி மேடையின் முன்னாலிருந்த தன் அம்மாவிடமோ, ஆசிரியையிடமோ முத்திரைகளால் பேசிக் கொண்டிருந்தாள். எடுத்த புகைப்படத்தில் தெளிவில்லை. ஆனால் தொடர்ந்து ஐந்து நிமிடம் நிகழ்ந்த இந்த உரையாடல் ரசிப்பதற்கு உரியதாக இருந்தது.

IMG_20180324_190354

பேருந்துகள் என்று பார்த்தால் ஹைதராபாத் மோசமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரம். நாற்பது நிமிடங்கள் நின்றபடி பேருந்தில் சென்று இன்னொரு பேருந்து பிடித்தோம். உஸ்மானியா மருத்துவமனை கண்ணில் தெரியும் நிறுத்தில் இறங்கினோம் (அப்சல் கஞ்ச்). நிறுத்தத்தில் கரும்புச் சாறு குடிக்கும் போது தமிழரான ஒருவர் வந்து பேசினார். சென்னைக்காரர், சினிமாவில் இருப்பவர். இப்போது சொந்தமாக படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இலக்கியம் பேசும்போது திரைப்படம் பற்றியும் பேச்சு வந்தது. கேட்டதும் நின்றிருக்கிறார். எங்களுக்கு நேரமில்லை என்பதால் சீக்கிரம் பேசிவிட்டு நகர்ந்தோம். நேராக நடந்து ஓட்டல் நயாப் சென்று அமர்ந்தோம். ஒரு மட்டன் பிரியாணி சொன்னோம். அருகில் இருந்த இரண்டு வெளிநாட்டவர் நீங்களும் நடைக்கு வந்தவர்களா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். அங்கிருந்தே நடை தொடங்கியது. இந்த முறை நடைக்கு வந்தவர்கள் வழக்கத்தை விடவும் அதிகம். அறுபது பேர்.

IMG_20180324_220434.jpg

ஓட்டலின் சமையலறைகள் இரண்டு. ஒன்று தற்காலத்திய வசதிகள் கூடியது. இன்னொன்று மரபான முறையில் விறகடுப்பு கொண்டு சமைக்கப்படுவது. அந்த விறகடுப்புகள் எரிந்து கொண்டிருக்கவே நாங்கள் உள்ளே சென்று பார்த்து வந்தோம். ஒரு நாள் முழுக்க உள்ளிருந்து வேலை பார்த்தால் வெந்த கோழியாக மட்டுமே வெளியே வர முடியும். இரானி தேநீர், பிரியாணி உள்ளிட்டவை இங்கு சமைக்கப்படுகிறது. வேலை செய்பவர்கள் அவசியம் தவிர உள்ளே இருக்க முடியாது. வெயில் நேரத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்தால் நடுங்குகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பிரியாணி ரசித்துச் சாப்பிட்டவன் நானேதான்.

IMG_20180324_220529.jpg

சிறிய தெருக்கள் வழியாக நடந்து, சார்மினார் பகுதியின் கடந்தகால மிச்சங்களை பார்த்தபடி பாட்சாஹி அஷூர் கானா சென்றோம். சார்மினார் கட்டி மூன்று வருடங்களுக்கு பிறகு 1594 இல், குலி குதுப் ஷா காலத்திலேயே கட்டப்பட்டது. பள்ளிவாசல், தர்கா வகையில் அஷூர் கானா துக்க வெளிப்பாட்டுக்கான இடம். இங்கிருக்கிற சுவரோவியம் முக்கியமானது. இதை எதனுடைய மாதிரி என்றோ சொல்லக் கேட்டேன்.

IMG_20180324_231402.jpg

இந்த காலகட்டத்தின் வழிபாட்டிடங்கள் பெரும்பாலும் உயரமான கோபுரங்கள் இல்லாமல், மொத்த அமைப்புமே உயரமாக்கி கட்டப் பட்டிருப்பவை என்றார்கள். தூண்கள் முழுவதும் கல் தூண்கள். மிகவும் உயரமானவை. சற்று நேரம் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்ததும் நகர்ந்தோம்.

IMG_20180324_231926.jpg

இன்னும் இடங்கள் பார்த்தபடி சார்மினாரின் ஒரு பகுதியில் இருக்கிற கடைகளை பார்த்தோம். ஒவ்வொரு வரிசை கட்டிடமும் வெவ்வேறு வகையில். மதச் சார்பற்ற வடிவமைப்பு என்றதும் எல்லா மதங்களின் கட்டிடக்கலை முறைகளையும் கலந்த முயற்சியாக அமைந்திருக்கிறது. கீழே கடைகள், மேலே வீடுகள். அவற்றில் சில வீடுகள் பால்கனிகள் கொண்டவை. எங்கே உதிர்ந்து விழும் என்கிற பயம். இதை கெய்ரோவில் இருக்கிற கான் அல்-கலிலி சந்தையை மாதிரியாகக் கொண்டு கட்டியது என்றார்கள்.

IMG_20180324_235727072_HDR.jpg

ஒரு பதினோரு மணி

IMG_20180324_235631445_HDR.jpg

க்காக சார்மினார் முன்னால் சென்று நின்றோம். கோவிந்த் அதன் வரலாறு சொல்லத் தொடங்கினார். ஆனால் சொந்த வாசிப்பு காரணமாக அவர் சொல்வது நெருக்கமாகவும் சந்தேகங்கள் குறைவானதாகவும் அமைவது. அவர் குலி குதுப் ஷாவின் கவிதையிலிருந்து வரலாறுக்கு துணை சேர்த்தார். முசி ஆற்றின் இக்கரைக்கும் அக்கரைக்குமான காதல் கதையாக அவர் குலி குதுப் ஷாவின் காதல் கதையாக நம்பப்படுவதை கூறுகிறார்.

IMG_20180325_002253.jpg

IMG_20180325_003452_Bokeh

அவரின் கூறும் முறை பயிற்சியால் வந்தது. ரசிக்கும்படி இருப்பது. அந்த இரவிலும் சார்மினார் சுற்றியும் கூட்டம். அருகில் இருந்த பாக்கியலக்ஷ்மி கோயிலிலும் நாளை ராமநவமி என்பதால் கூட்டம்(!). தொடர்ந்து ஒரு தேநீர் குடித்துவிட்டு பனிரெண்டரை மணிக்கு ஒரு வண்டி பதிவு செய்து கிளம்பினோம். அப்படியும் அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்து தினக்குறிப்பு எழுதியதும் தூங்க மூன்று மணி.

– நாகபிரகாஷ்
24-மார்ச்-2018

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s