கொஞ்ச நாட்களும் சில வரிகளும்

IMG_20180929_070341738.jpg

*
இன்னொரு முறை ஹைதராபாத் போவது என்பது எதிர்பாராமல் சாத்தியப்பட்ட ஒன்று. PyCon இந்தியா பதிவு தொடங்கியதும் மநுவிடம் விடுமுறை கிடைக்குமா போவதற்கு என்றேன். அவர் அதற்கென்ன கொஞ்சம் பைசாவும் வாங்கிக் கொள் என்றார். உடனே அலுவலகத்தில் வேறு எவருக்கேனும் விருப்பமிருந்தாலும் போய் வரலாம் என அறிவித்தார். அன்றே பதினோரு பேருக்கு மேல் தயாராக இருந்தார்கள். கொஞ்சம் பைசா என்பதை மநு எவருக்கும் எவ்வளவு என்று சொல்லவில்லை.

எனக்கு பொது நுழைவுச் சீட்டு வாங்கியதும், என்ஃபா என்கிற பெண் நீயும் மாணவர்களுக்கான சீட்டு வாங்கவில்லையா என்றாள். எதற்கும் உறுதிப்படுத்தலாம் என்று அமைப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதி செய்துவிட்டு நான் எடுத்ததை ரத்து செய்து மாணவர் சீட்டு வாங்கினேன். அடையாள அட்டையை காட்டினால் போதும். அவளுக்கும் சொல்லி எப்படி என்று உதவினேன். ஒரு ஐந்நூறு ரூபாய் மிச்சம்.

அலுவலகத்தில் அனைவரும், என்ஃபா உட்பட, விமானத்தில் முதல் தினம் சென்று இறங்குவதும் ஓயோ மூலம் அறையெடுத்து தங்குவதும் என்று திட்டமிட்டார்கள். எனக்கு இதெல்லாம் சரிப்படாது என்று தெரிந்துவிட்டது. இன்னும் ஹைதராபாத்தில் பாரதி வேலையை விட்டிருக்கவில்லை. எனவே அவனோடே ஒருவாரம் முன்னால் சென்று தங்குவது என்று திட்டம். எப்போதும் போல, வேலையும் செய்து தேவைக்கு மட்டும் விடுமுறை எடுப்பது. எப்படியோ அதே வாரத்தில் பைக்கானுக்கு எடுத்த விடுமுறை சேர்க்காமல் எனக்கு இரண்டு நாள் கிடைத்தது. சென்று இறங்கியது சனிக்கிழமை என்பதால் ஓய்வெடுத்தேன்.

IMG_20180930_124645175.jpg

அடுத்த தினம் (30 Sept) பாரதியையும் அழைத்துக் கொண்டு நான் கோவிந்துடன் போனேன். வெகு நாட்களுக்குப் பிறகு மனம் நொந்து பாண்டிச்சேரி போயிருந்தவர் திரும்பி வந்து சில நடைகள் ஒருக்கியிருந்தார். அன்று பைகா கல்லறைகள் சுற்றியும் உள்ளேயும் நடை. தொடங்கியது தெரு முனையில் இருக்கும் சிறு கடையிலிருந்து. அங்கே லுக்மி என்கிற உணவு. கோவிந்த் சொன்னது போல, சமோசாவுக்கும் ரொட்டிக்கும் பிறந்தது, உருளைக்கிழங்கு குருமாவுடன் பரிமாறினார்கள். எங்களுடன் சென்னையிலிருந்து வந்த பாரதியின் தோழி கீதாஞ்சலியும் அவருடைய தோழி பிரியங்காவும் சேர்ந்து கொண்டார்கள். அன்று ஒரு வார சுற்றுதல் முடிந்து இரவே சென்னை திரும்பவிருந்தார்கள்.

எப்படியோ கீதாஞ்சலி உடனே நட்பாகிவிட்டார். எனக்கும் அன்று காலை எப்போதும்போல உணர்வுக் குழப்பத்துடன் தொடங்கியும் நான் அவன் நினைப்பு வந்த காரணமோ என்னமோ இயல்பாகிவிட்டேன். ஒருவேளை என் பலசமயம் பொருளற்ற கேலிகளை கீதாஞ்சலி பொருத்துக் கொண்டதாலும் இருக்கலாம். அவர்கள் அங்கும் இங்கும் புகைப்படம் எடுத்துத் தள்ளினார்கள். அந்த கல்லறைகளின் பொறுப்பாளர் ஏனோ அவர்களை உட்கார வைத்துவிட்டு, கேமராவை வாங்கி புகைப்படக்காரராக மாறிவிட்டிருந்தார். என்னையும் பாரதியையும் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் தலையெழுத்தோ அவர்களின் பைகளை சுமந்து நிற்கும் தென்னை மரம் போலானது.

IMG_20180930_112948895.jpg

அங்கிருந்து பயணப்பட்டு நயாப் போய் சாப்பிடுவது. அவர்களிடமும் பாரதியிடமும் அவனைப் பற்றி பேசியபடியே வந்தேன். ஓட்டலில் ஆகர்ஷிகா வந்து சேர்ந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்ததால் கல்லூரியிலிருந்து விடுதலையாகி வந்திருந்தாள். ஆகர்ஷிகாவும் பாரதியும் பேசிக் கொண்டிருக்க மற்ற இருவருடன் நான் செளமஹல்லா அரண்மனை பார்க்க நடந்தேன்.

போகும் வழியில் அவனுக்கு ஒரு பரிசு வாங்க நினைத்ததை சொன்னதும் இருவரும் முத்துக்களால் ஆன எதையாவது வாங்கிக் கொடு என்றார்கள். எனக்கும் அதுவே பொருத்தமானது என்று தோன்றவும் சரி என்றேன். என்னை அவர்கள் முதல் நாள் பாடுபடுத்தியிருந்த கடைக்கே அழைத்துச் சென்று வாங்க உதவினார்கள். அந்த கடைக்காரர் அவர்களை பார்த்ததுமே அலறி தன் சொல்லும் விலையை நியாயமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

செளமஹல்லா சுற்றிப் பார்க்கும்போதும் அவ்வப்போது அவனைப் பற்றியே பேச்சு. அப்படியே வேறு வெட்டி அரட்டைகள். கொஞ்சம் பிரியங்காவை என் இடையில்லா பேச்சு எரிச்சலாக்கியதோ என்று தோன்றியது. அப்படியே அதற்கு மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று நினைத்து மறந்து பின்னர் அவர்கள் போன பிறகே கீதாஞ்சலியிடம் சொல்லச் சொன்னேன்.

அங்கிருந்து வெளியே வரும்போது பாரதியும் ஆகர்ஷிகாவும் காத்திருக்க நாங்கள் ஜும்மா மசூதிக்கு சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எப்படி கேளரத்துக்கு உள்ளே இலக்கியம் போன்றவற்றில் உஸ்தாதாக இருக்கும் இளைஞர்கள் குறைவு என்றும் அதே எப்படி வெளியே கொள்ளை எண்ணிக்கை என்றும். எனக்கு தெரிந்தவரை வெளியே இருப்பவர்கள் இரண்டாம் தலைமுறையாகவே இருப்பார்கள் என்றேன். முதல் தலைமுறையின் கனவு முழுக்க வெளியே எங்காவது போய் சம்பாதிப்பது தவிர வேறில்லை. அவர்களே கேளரத்துக்குள் மிகுதி என்றேன். அவர்கள் யோசித்து ஆமாம் என்றார்கள்.

அன்றைக்கு அப்படியே பேசிக் கொண்டிருந்தவிட்டு கிளம்பினோம்.

IMG_20180930_161329563.jpg

*
காந்தி ஜெயந்தி அன்று கோபால் மத நல்லிணக்க நடை ஒன்றை பிரிட்டிஷ் ஹைகமிஷனோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு துணை ஹைகமிஷனர் ஆண்ட்ரூ வருவதாக இருந்தது. என்னால் கொஞ்சம் தாமதமாகிவிடும் போலிருந்து சமாளித்தேன். ஆனால் கிளம்பும் நேரம் முன்பு வரை தூங்கிக் கொண்டிருந்தது என்னவோ கோவிந்த்! ஒரு ஹிப்பியைப் போல வாழும் இந்த மனிதரை நினைத்து ஒரு அச்சம் அடி வயிற்றிலிருந்து எழுகிறது. எப்படி அவரால் இப்படி ஒரு வாழ்வை எந்த ஒட்டுதலும் இல்லாமல் வாழ முடிகிறது. எந்த சட்டகத்திலும் அடைபடாத வாழ்வு.

ஒரு சிவன் கோயிலில் தொடங்கி தர்காக்கள், கோயில்கள் என கடந்து சார்மினார் அருகே ஜும்மா மசூதியில் முடிந்தது. இடையில் ஒரு பூங்காவில் உட்கார்ந்து உரையாடியிருந்தோம். ஆண்ட்ரூ இருந்தவரை காவலர்கள் துணைக்கு வந்தார்கள். அவரும் பாதி தூரம் வரை நடந்திருந்தார். மொத்தம் மூன்று மணிநேரம். நாங்கள் காலை உணவும் எடுத்திருக்கவில்லை. கோவிந்த் பல்லே விலக்கவில்லை. என்ன செய்ய. எனக்கு கொஞ்சமும் ஆர்வமே ஏற்படுத்தவில்லை நடை. ஷபாப், சாரா, மற்றும் நண்பர்கள் கேரளத்தவர். ஆகர்ஷிகா படிக்கும் EFLUவில் முதலாமாண்டு படிப்பவர்கள். இந்த நடையைப் பற்றி சொல்லி அனைவரையும் அழைத்து வந்தது சாரா. அவனை ஏதாவது கேலி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று தோன்றியது. அவனிடமே சொல்லி பின்னர் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் செய்தேன்.

IMG_20181002_092026871.jpg

இரண்டு இரானி தேனீர் நிம்ராவில் ஊதி ஊதிக் குடித்துவிட்டு அவரசமாக வண்டி பதிந்தேன். இன்று மந்தன் சம்வாதம் நடக்கிறது போவோம் என்றார். ஆனால் பார்த்தால் நுழைவுக்கு பதிவு முடிந்திருந்தது. போகும் வழியில் ஆட்டோவுக்கு பத்து ரூபாயில் சண்டை துவங்கி வாடா போகலாம் என்று ஆட்டோக்காரர் கத்தும்போதே நடக்கத் கோவிந்த் நடக்கத் துவங்க, எங்கோடு வந்த ஒருவரை அவர் பிடித்துக் கொண்டார். எப்படியோ சமாளித்து நாங்கள் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.

*
பிரபாத் பட்நாயக்கின் உரை ஒன்றை கேட்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நிறைய குறிப்புகளும் எடுத்து வைத்திருக்கிறேன். இன்னொரு முறை அதை சரி பார்த்ததும் இன்னும் கொஞ்சம் வாசிக்க வேண்டும். ஆனால் TISS பல்கலை சூழலின் மீது எனக்கு சில விமர்சனங்கள்.

43133272_1175052719299910_5481490803664617472_n

*
அந்த வார இறுதியில் பைகான். ஆனால் வெள்ளிக் கிழமையே ஒரு பட்டறை. பாண்டாஸின் மேம்படுத்துனர் மார்க் கார்சியா நடத்தியது. ஆனால் சொதப்பல். எதிர்பாராமல் என் அலுவலக கும்பலில் மூவர் வந்திருந்தார்கள். அவர்களுடன் மதியச் சாப்பாட்டுக்கு கோவிந்தின் பரிந்துரையால் பாரடைஸ், ஹைடெக் சிட்டிக்கு போனேன். கொஞ்சம் அல்ல, நிறையவே விலை. மேலும் எந்த ஹைதராபாத் ஓட்டலிலும் மாடியில் ஏறவே கூடாது. கீழிருப்பதை விடவும் மேலே அதே உணவின் விலை அதிகம். அந்த தவறை செய்தோம்.

அங்கிருந்து உடல் சோர்வுடன் அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்தேன்.

இரவில் இதிஹாஸ் முதல் நாளும் பிறகும் எப்போதெல்லாம் அவர் உணவு வாங்க நேர்ந்ததோ என்னிடம் பணம் மட்டும் வாங்கவே மாட்டேன் என்றார். அன்றும் அப்படியே. அவரிடம் சொல்லிப் பார்த்து சலித்துவிட்டது. பாரதி அவருக்கு மேற்கத்திய மரபில் பிடித்தம் எப்படி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். போன முறை போலில்லாமல் இந்த முறை அவரோடு பேச நிறைய நேரம் கிடைத்தது. ஆனால் எனக்குத்தான் அவ்விஷயம் சூன்யம் என்பதால் பொதுவான விஷயங்களையே அதிகம் பேசிக் கொண்டிருந்தோம். அதே நேரம் பாரதியை ஓட்டுவதில் சேர்ந்துகொண்டோம். அவருக்கு பூச்சி போன்ற சிறிய ஜந்துக்களில் அத்தனை பயம். ஒரு நாள் நான் உள்ளே போகும்போது கதறிக் கொண்டிருந்தார். என் எண் இல்லாமல் அப்போதே பாரதியை அழைத்து வாங்க நினைத்தாராம். ஒரு பல்லி அவரது அறைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது! அன்றிருந்து அவரை அவ்வப்போது ஓட்டிக் கொண்டிருப்பேன்.

*
இப்படியான ஒரு நிகழ்வில் கலந்துகொள்வது முதல்முறை. பைகான்! வெள்ளிக் கிழமை நிகழ்விடம் அடைவதற்காக கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்திருந்தேன். அதை மீண்டும் செய்யாமல் தவிர்த்தேன். அலுவலக நண்பர்கள் இருந்த இடம் போய் பணம் பகிர்ந்து பயணித்தோம். நிறைய கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த பைகான் உதவியது.

இரண்டு நாளும் இரண்டு சந்திப்புகள் முக்கியமானவையாக இருந்தன. ஒன்று, வெள்ளிக்கிழமை அறிமுகமான மார்க் கார்சியாவுடன் பேசுவதற்கு கிடைத்த நேரம். நீ ஏன் கணிதம் கற்றுக் கொள்ள நேரம் வீணடிக்கிறாய், ஏதாவது சிக்கல்களை எடுத்து தீர்க்க முயற்சி செய், கணிதம் கற்கும் ஆர்வம் தேவை வரும்போது தன்னால் வரும் என்றார். என் தீர்மானங்கள் என்று ஒன்றும் இல்லாவிட்டாலும் வரைந்த ஒரு மெல்லிய வரைபடம் அப்படி யோசிக்கும்போது கரைந்து அழிகிறது. எனவே முதல் புள்ளியிலிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். இதை எழுதும் நேரம் வரை அதை தொடங்கும்படியான சவாலை சந்திக்கவில்லை.

இரண்டாம் நாள், ஞாயிறு, சார்ல்ஸ் செவரென்ஸை உணவு இடைவேளையில் அடையாளம் கண்டு பேசினேன். என் ஆரம்பப் பள்ளி ஆசிரியரை சில பத்தாண்டுகள் கழித்து சந்திப்பது போன்றிருக்கிறது என்றேன். அவருடைய பொதுவெளியில் வைக்கப்பட்ட புத்தகமே என் வாழ்வில் பைத்தானை நுழையச் செய்தது. அப்படி ஐந்து நிமிடம் இருக்கும்போதே அவரது புத்தகத்தின் சமீபத்திய பதிப்பை தமிழாக்கேன் என்றார். இந்த வருட இறுதிக்குள் மொழிபெயர்ப்பின் பணிகள் பெரும்பகுதி முடித்திருப்பேன் என்று வாக்களித்தேன்.

43283013_1176850709120111_4785801724864495616_n

ஓட்டமும் நடையுமாக பைக்கான் இரண்டு நாளும் சந்திக்க வைத்த அனுபவங்கள் நிறைய. அருகிலிருந்தும் இயல்பு தெரியாமலிருந்த சிலவற்றையும் அடையாளம் கண்டேன். இனி அதிகமும் பார்த்து மலைக்க வைக்கிற விஷயங்களும் அதில் எளிது என்று புழங்கும் மனநிலையோடு அணுக வேண்டும். என்னை பைக்கான் போகச் சொல்லி வெகு காலம் முன்னரே சொன்ன நண்பர் ராகவை நினைத்திக் கொண்டேன். அவர் வர முடியாது போயிருந்தது.

ஒவ்வொன்றையும் எழுத நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எனவே எழுதாமல் விட்டுவிடுவது நலம். ஆனால் நினைவிலிருந்து போகாது என்பதை நிச்சயம். பைக்கான் முடிந்து வார நாட்கள் அங்கிருந்தே வேலை செய்துவிட்டு விடுமுறையில் திரும்பும் ரயில் ஏறினேன். அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக கராச்சி பிஸ்கட்டுகள் வாங்கிக் கொண்டிருந்தேன்.

*
ஒரு வாரம் வீட்டிலிருந்து அதே வார இறுதியில் ஐந்திணை கூட்டம் 2 (அக்டோபர் 13, 14). இம்முறை காரைக்குடியில் நண்பர் நாராயணன் மெய்யப்பனின் செட்டிநாட்டு வீட்டில். தலைமை நாஞ்சில் நாடன். இம்முறை ஒரு விமர்சனம் நான் எழுதியது. லங்கூர் தொகுப்பின் மேல். ஆனால் இந்த சந்திப்பு மட்டுமில்லாமல் விமர்சனம் நான் எழுதியதும், அதற்கு வந்த பதில் விமர்சனமும் சில புரிதல்களும் வாழ்வில் முக்கியமானவை. அதிர்ச்சியும். அதே நேரம் கட்டுரை நிறைவானது.

இக்கூட்டத்தின் சிறப்பு பேருந்து வாடகைக்கு எடுத்து சித்தன்ன வாசலும், குடுமியான் மலையும் போனது. செட்டிநாட்டு உணவு. சென்ற கூட்டத்தை காட்டிலும் குறைவான உரையாடல் திசைமாறுதல் மற்றும் சர்ச்சைகள். இன்னும் வரும் கூட்டத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் கவனித்தோம்.

இதை தனியே எழுத வேண்டும்.

44023887_10216717749403658_4340431251405012992_o

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s