என் கதைச் சுருக்கம்

21558681_1960835750864074_8836935672517173135_n

என் முழுப்பெயரே நாகபிரகாஷ். பெயருக்கு நடுவில் ‘ப்’ அல்லது இடைவெளி நுழைவதும் விரும்பாதவன். அறிந்தும் அருகிலும் எவருக்கும் இல்லாத பெரும் சொத்து இந்த பெயர். என் அம்மை தந்தது. இருபது வயது ஆயிற்று. ஊர் சேலம். இப்போது கொச்சியில் இருக்கிற ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இலக்கியம், சமூகவியல் மற்றும் கொஞ்சமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்து படிக்கிறேன். அத்தனையும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய பின்னர் சுயமான கற்றல். நேர்மையாக, மேலோர் தோளில் அமர்ந்து வெகு தூரம் பார்க்க முயலும் சிறுபிள்ளை.

ஒரு விபத்தாக அடிப்படை வாசிப்பை சிறுவயதில் கடந்து வந்திருந்தேன். தீவிரமாக எழுதவேண்டும் என்று தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனாலும், கணினியில் வைத்தவிரல் வேகம் பிடித்திருப்பது 2016ஆம் வருடத்திற்கு பிறகு. உண்மையில் அதற்கு முன்னர் எழுதியவை புனைவுகளாக இல்லாமல் நிஜங்களாக மட்டுமே இருந்ததால், சுய விமர்சனத்தின் அடிப்படையில் பகிர்வதில்லை. இன்னமும் தீவிரமாக வாசிக்கவும் வேண்டியிருக்கிறது.

என் கதைச் சுருக்கமாக முதலில் கூறப்பட வேண்டியது எனக்கு உழைக்க மட்டுமே விதிக்கப்பட்டிருந்ததை. என் லட்சக்கணக்கான சகோதரர்களை போல், சராசரியைவிட குறைந்த வயதில் உழைக்கத் தொடங்கினேன். உழைத்தாக வேண்டியிருந்தது, இருக்கிறது.

என் படைப்புகளை முதலில் வெளியிட்டது, யாவரும்.காம் (2014). இன்றைக்கும் அவ்வப்போது அங்கே எழுதுகிறேன். இன்மை கவிதைக்கான இணைய இதழ் வெளிவந்த காலத்தில் இதழுக்கு ஒரு படைப்பாவது வந்து கொண்டிருந்தது. முக்கியமாக கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும், சில குறிப்புகளும். எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் கவிதையை நான் நெருங்க முயன்று இயலாமல் போன பொழுதுகளிலும் தேற்றியிருக்கிறார்.

சொல்வனம், மலைகள், திண்னை போன்ற இதழ்களிலும் படைப்புகள் வந்திருக்கின்றன. கணையாழியில் முதலில் வந்தது ஒரு கவிதை (2014, ஆகஸ்ட்). கவிதைகள் மட்டுமே நிறைய எழுதிக் கொண்டிருந்த காலம் என்பதைவிட, அதுவே வசப்பட்ட சூழல் என்று சொல்லலாம்.

இப்போது கதைகளை நோக்கி நகர்ந்திருக்கிறேன். முதல் கதைக்கு நான் எடுத்துக் கொண்ட காலம் சரியாக ஒரு வருடம். ஏதாவது உயரத்தை எட்டிய கதையா என்றால், சத்தியமாக இல்லை. அதில் சிக்கித் திணறி இருந்தேன். அந்த கலைக்கு வாலில்லை என்ற அந்த கதையை பூட்டியே வைத்துக் கொண்டேன். இப்போது திறந்து விடப்பட்ட பூதமாக அலைந்து கொண்டிருக்கிறது.

என் வீடு என்கிற கணையாழியில் வந்த கதையே (2016, மார்ச்) என்னுடைய அச்சில் வந்த முதல் கதை. மலைகள்.காமில் (2014) விளையாட்டாகவே எழுதி அப்படியே பிரசுரமும் ஆன சிறுகதை ஒன்றும், அதற்கு முன்பாகவே யாவரும்.காமில் சிதைந்த கூடு (2014, மே) என்கிற வடிவ ரீதியில் முழுமையடையாத கதையும் பிரசுரம் கண்டிருந்தன.

அகநாழிகை பதிப்பகத்தின் ‘விளிம்புக்கு அப்பால்‘ (2017, மே) பதினான்கு இளம் படைப்பாளிகள் தொகுப்பில் ‘நோக்கு’ என்கிற என்னுடைய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது.

இப்போது எழுதியவற்றை இங்கு தொகுப்பதுடன், எழுதிக் கொண்டிருப்பதையும் பிரசுரம் கண்டவுடன் பகிர்கிறேன். பிரசுரத்துக்காக காத்திருக்கும் கதைகள் மட்டும் இப்போது மூன்று. எழுதச் சேர்ந்திருக்கும் கருக்கள் சில பத்துகள். கனவுகளோ ஒரு நூறாயிரம்.

தொடர்புக்கு

Advertisements